சொகுசு விடுதியில் மோதல் வழக்கு: தலைமறைவான கர்நாடக காங்.எம்.எல்.ஏவை தேடும் பணி தீவிரம்


சொகுசு விடுதியில் மோதல் வழக்கு: தலைமறைவான கர்நாடக காங்.எம்.எல்.ஏவை தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 24 Jan 2019 3:11 AM GMT (Updated: 24 Jan 2019 3:11 AM GMT)

சொகுசு விடுதியில் இருந்த போது எம்.எல்.ஏ ஆனந்த் சிங்கை தாக்கிய வழக்கில் தலைமறைவாகியுள்ள கம்பளி தொகுதி எம்.எல்.ஏ கணேசை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுத்து பா.ஜனதா ஆட்சி அரியணையில் அமர முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ராமநகர் மாவட்டம் பிடதியில் உள்ள ரெசார்ட்டில் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டனர்.

கடந்த 19-ந் தேதி இரவு ரெசார்ட்டில் வைத்து பல்லாரி மாவட்ட எம்.எல். ஏ.க்கள் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப் படுகிறது. இந்த வேளையில் கம்பளி தொகுதி எம்.எல்.ஏ. கணேஷ், விஜயநகர் தொகுதி எம்.எல்.ஏ.வான ஆனந்த்சிங்கை தாக்கியதாக கூறப்படுகிறது/
இதில் காயமடைந்த ஆனந்த்சிங் பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, ஆனந்த்சிங் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் கணேஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் மறுத்தனர்.

இதற்கிடையில், ஆன்ந்த் சிங் அளித்த புகாரின் பேரில், கணேஷ் எம்.எல்.ஏ. மீது பிடதி போலீசார்  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்திய தண்டனை சட்டம் 323 (தாக்குதல்), 324 (பயங்கர ஆயுதங்களால் தாக்குதல்), 307 (கொலை முயற்சி), 504 (அமைதிக்கு குந்தகம் விளைவித்து அவமானப்படுத்துதல்), 506 (குற்றமிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கணேஷ் எம்.எல்.ஏ தலைமறைவானார். அவரை கைது செய்ய  தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் அவரை தீவிரமாக தேடிவருகிறார்கள்.

Next Story