ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு


ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்  உத்தரவு
x
தினத்தந்தி 24 Jan 2019 8:05 AM GMT (Updated: 24 Jan 2019 8:05 AM GMT)

ஆலையை திறக்க அனுமதி கேட்டு ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடர்ந்த வழக்கு விசாரணையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,

தூத்துக்குடியில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கடந்த மே 22-ந்தேதி வன்முறையாக வெடித்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் வன்முறையை கட்டுப்படுத்த நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் பொதுமக்களில் 13 பேர் பலியாகினர்.

இந்த நிலையில்,  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆலைக்கு தேவையான மின்சார வசதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இதனையடுத்து,  ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

ஆலையை திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம்  சுப்ரீம் கோர்ட்டில்  வழக்கு தொடர்ந்தது. இந்த  வழக்கில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின்இணைப்பு வழங்க வேண்டும் என ஆலையை திறக்க உத்தரவிட கோரி வேதாந்தா தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. பசுமை தீர்ப்பாய உத்தரவை அமல் செய்யவில்லை என தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.

போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி ஆட்சியர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.

Next Story