மும்பையில் மாடல் அழகி மான்சி கொலையில் புது திருப்பம்: பாலியலுக்கு மறுத்ததால் கொலை


மும்பையில் மாடல் அழகி மான்சி கொலையில் புது திருப்பம்: பாலியலுக்கு மறுத்ததால் கொலை
x
தினத்தந்தி 25 Jan 2019 8:55 AM GMT (Updated: 25 Jan 2019 9:33 AM GMT)

மும்பையில் கொல்லப்பட்ட மாடல் அழகி பாலியல் உறவுக்கு மறுத்ததால் கொல்லப்பட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவை சேர்ந்த மான்சி திக்‌ஷித் (வயது 20) மாடலிங் துறை கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள மும்பைக்கு குடிபெயர்ந்தார். அப்போது 19 வயது கல்லூரி மாணவர் முஸமில் சையத் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் ஐதராபாத்தை சேர்ந்தவர் என்றாலும் அந்தேரியில் வசித்து வந்தார்.  கடந்த அக்டோபரில்  மான்சி திக்‌ஷித்  கொலை செய்யப்பட்டு, உடலை சூட்கேசில் வைத்து வீசப்பட்டு இருந்தார். இதுதொடர்பாக விசாரணையை மேற்கொண்ட போலீஸ் சையத்தை கைது செய்தது.  விசாரணையில் குற்றத்தை சையத் ஒப்புக்கொண்டார். 

சம்பவம் நடந்த அன்று மலாத்தில் மான்சியை கொன்று அவரது உடலை சூட்கேசில் அடைத்து காரில் கொண்டு சென்றுள்ளார். அங்கு ஒரு இடத்தில் சூட்கேசை வீசிவிட்டு ஆட்டோவில் தப்பிச்சென்றுள்ளார். இதனை கார் ஓட்டுநர் கவனிக்க அவருக்கு கடும் சந்தேகம் எழுந்துள்ளது. போலீசாருக்கு தகவல் அனுப்பினார். போலீசார் வந்து சூட்கேசை கைப்பற்றி, கொலையை உறுதி செய்ததோடு சிசிடிவி காமிரா பதிவுகளையும், கார் ஓட்டுநரின் உதவியுடனும் சையத்தை கைது செய்தனர். வழக்குப்பதிவு செய்து கொலைக்கு வேறு காரணங்கள் உண்டா, பின்னணியில் யார் என்று துருவித்துருவி விசாரித்தனர். 

மும்பையில் கொல்லப்பட்ட மாடல் அழகி பாலியல் உறவுக்கு மறுத்ததால் கொல்லப்பட்டுள்ளார் என இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்பட கலைஞராக பணியாற்றிய சையத் புகைப்படம் எடுப்பதற்காக மான்சி திக்‌ஷித்தை அழைத்துள்ளார். அப்போது பாலியல் உறவு வைத்து கொள்வதற்காக அழைத்துள்ளார். அதற்கு மான்சி மறுக்கவும் கட்டாயப்படுத்தியுள்ளார். மான்சி சம்மதம் தெரிவிக்காத நிலையில் அவரை மர ஸ்டூலால் தாக்கியுள்ளார் என்று போலீஸ் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சையத் தாக்கியதில் மான்சி மயக்கம் அடைந்து விழுந்துள்ளார். அப்போது அவரை பாலியல் ரீதியாக சையத் துன்புறுத்தியுள்ளார். பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். அதன் பின்னர் ஷூ லேசால் கழுத்தை நெரித்து மான்சியை கொன்றுள்ளான். அவனுடைய ஆடையில் இருந்து விந்து மாதிரியை போலீசார் சேகரித்துள்ளனர். மான்சியின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவருடைய அந்தரங்கப்பகுதியில் காயங்கள் இருந்தது என போலீஸ் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்பிக்கும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story