ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நியமனத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மீண்டும் மறுப்பு


ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நியமனத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மீண்டும் மறுப்பு
x
தினத்தந்தி 28 Jan 2019 8:32 AM GMT (Updated: 28 Jan 2019 9:55 AM GMT)

சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நீடிக்க தடையில்லை என சுப்ரீம் கோர்ட் மீண்டும் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்  தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தநிலையில், சிலை கடத்தல் விவகாரத்தில் சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரிக்க வேண்டியது இருப்பதால், சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து வக்கீல் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சிலை கடத்தல்  வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது.

இதனையடுத்து தமிழக அரசின் பதிலும் தாக்கல் செய்யப்பட்டு ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்றது.  இந்த நிலையில் கடந்த நவம்பர் 30-ந்தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற இருந்த நிலையில், உயர் நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்தது.

சி.பி.ஐ.க்கு வழக்குகளை மாற்றும் தமிழக அரசின் அரசாணையை சட்டவிரோதம் என்று கூறி ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் ஓய்வுபெறும் ஐ.ஜி. பொன். மாணிக்கவேலை ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமித்தும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், சிலை கடத்தல் வழக்கு விசாரணையில் சிறப்பு அதிகாரியாக ஐ.ஜி. பொன். மாணிக்கவேலை நியமித்ததற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

தமிழக அரசின் மேல்முறையீட்டை விசாரித்த  சுப்ரீம் கோர்ட், ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் எந்த சிறப்பான வேலையையும் செய்யவில்லை. அவர் தன்னைத்தானே புகழ்ந்து கொண்டு மட்டும் தான் இருக்கிறார் என சுப்ரீம் கோர்ட்டில்  தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.

தமிழக காவல்துறையில் சிறப்பான அதிகாரிகள் இருக்கும் போது, ஏன் வழக்கு சி.பி.ஐ.க்கு அனுப்பப்பட்டது? என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது.

சிறப்பாக நடைபெற்று வரும் விசாரணையை அரசு சீர்குலைக்க முயற்சிப்பதாக யானை ராஜேந்திரன் குற்றஞ்சாட்டினார்.

இதனையடுத்து ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நியமனத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மீண்டும் மறுப்பு தெரிவித்து உள்ளது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை 19-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story