10 சதவீத இடஒதுக்கீடு: ஆண்டுக்கு ரூ. 8 லட்சம் வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி விலக்கு வேண்டும் - சிவசேனா


10 சதவீத இடஒதுக்கீடு: ஆண்டுக்கு ரூ. 8 லட்சம் வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி விலக்கு வேண்டும் - சிவசேனா
x
தினத்தந்தி 28 Jan 2019 10:23 AM GMT (Updated: 28 Jan 2019 10:23 AM GMT)

ஆண்டுக்கு ரூ. 8 லட்சம் வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி விலக்கிற்கு அனுமதியளிக்க வேண்டும் என சிவசேனா கூறியுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு வேலைவாய்ப்பு, கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலுடன் இந்த மசோதா, சட்டம் ஆனது. இந்த சட்டத்தின்படி ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் இச்சலுகையை பெற தகுதியானவர்கள் ஆவார்கள். அதே சமயம் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள் இந்த சலுகையை பெற முடியாது என்பன உள்ளிட்ட சில நிபந்தனைகளும் இதில் விதிக்கப்பட்டு உள்ளன.

இந்த சட்டம் ஏற்கனவே குஜராத், இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைமுறைக்கு வந்து விட்டது. இதையடுத்து பொதுத்துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளிலும் இந்த சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்  ஆண்டுக்கு ரூ. 8 லட்சம் வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி விலக்கிற்கு அனுமதியளிக்க வேண்டும் என சிவசேனா கூறியுள்ளது.

மும்பையில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பேசுகையில், "சிவசேனா நிர்வாகிகள் கூட்டத்தில் நாங்கள் ரபேல் விவகாரம் மற்றும் மராட்டியத்தில்  வறட்சி தொடர்பாக பேசினோம்" என்றார். 

உத்தவ் தாக்கரே பேசுகையில், "பொதுப்பிரிவினருக்கு வேலைவாய்ப்பு, கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் இச்சலுகையை பெற தகுதியானவர்கள். இவர்களுக்கு வருமானவரியை கட்டுவதில் இருந்தும் விலக்கு அனுமதிக்கப்பட வேண்டும். நீங்கள் அவர்களை ஏழைகள் என பட்டியலிடும் போது, வரிவிலக்கும் அனுமதிக்கப்பட வேண்டும்" என கூறினார். 

Next Story