மத்திய அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தால் அது அரசியலமைப்புக்கு மாறானது - யஷ்வந்த் சின்ஹா


மத்திய அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தால் அது அரசியலமைப்புக்கு மாறானது - யஷ்வந்த் சின்ஹா
x
தினத்தந்தி 28 Jan 2019 1:24 PM GMT (Updated: 28 Jan 2019 1:24 PM GMT)

தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு ஆண்டு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தால் அது அரசியலமைப்புக்கு மாறானது என முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.



2019 தேர்தல் நடைபெற சில மாதங்கள் இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில் 2019–20ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1-ல் தாக்கல் செய்யப்பட உள்ளது. பா.ஜனதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக ஓரணியில் திரளும் நிலையில் இந்த பட்ஜெட் மிகவும் முக்கியமான பட்ஜெட்டாக பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் விமர்சனகளுக்குள் சிக்கியிருக்கும் பா.ஜனதா அரசுக்கும் மிகவும் முக்கியான பட்ஜெட் ஆகும். வருவான வரி வரம்பில் மாற்றம் விவசாயிகளுக்கான சலுகை உள்ளிட்ட காரணிகள் இதில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. 
 
மத்திய பட்ஜெட் தாக்குதலில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மாற்றங்களை கொண்டுவந்து உள்ளது. பா.ஜனதா அரசு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதை பிப்ரவரி 28-ம் தேதியிலிருந்து பிப்ரவரி 1-ம் தேதியாக மாற்றியது. இதுபோல ரெயில்வே பட்ஜெட்டையும், பொது பட்ஜெட்டுடன் இணைத்தது. திட்ட ஆணையத்தை (Planning Commission) கலைத்துவிட்டு நிதி ஆயோக் ஏற்படுத்தியது. தேர்தல் நடைபெற உள்ளநிலையில் மத்திய அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்.  

இடைக்கால பட்ஜெட் என்பது தேர்தல் நடைபெற உள்ள ஆண்டில் முழு ஆண்டுக்குமாக இல்லாமல்,  இடைப்பட்ட சில மாதங்களுக்கான வரவு செலவு குறித்து தாக்கல் ஆகும். பின்னர் பதவி ஏற்கும் புதிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இடைக்கால பட்ஜெட்டை பொறுத்தவரையில் அதுஒரு தற்காலிக பட்ஜெட் ஆகும். 
 
இந்நிலையில் முழு பட்ஜெட்டை மத்திய பா.ஜனதா அரசு தாக்கல் செய்யலாம் என யூகங்கள் எழுந்து உள்ளதே? என்ற கேள்விக்கு முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பேசுகையில்,  வெளியேறும் அரசாங்கம் இதனை செய்வதற்கு முன்னுரிமை கிடையாது.  முழுமையான வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பது என்பது முற்றிலும் முறையற்றது மற்றும் அரசியலமைப்பிற்கு மாறானது என கூறியுள்ளார். மேலும், தேசத்தின் பொருளாதார நிலை மற்றும் வேலைவாய்ப்பு விவகாரத்தில் மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார் யஷ்வந்த் சின்ஹா.

Next Story