ஆதிவாசி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காங்கிரஸ் தலைவருக்கு எதிராக வழக்குப்பதிவு


ஆதிவாசி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காங்கிரஸ் தலைவருக்கு எதிராக வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 30 Jan 2019 9:13 AM GMT (Updated: 30 Jan 2019 10:15 AM GMT)

கேரளாவில் ஆதிவாசி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காங்கிரஸ் தலைவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஒம் ஜார்ஜ் வீட்டில் ஆதிவாசி தம்பதியினர் பணியாற்றி வந்துள்ளனர்.  வீட்டு வேலை செய்து வந்த அவர்களுக்கு, அவர்களுடைய 17 வயது மகளும் அவ்வப்போது சென்று உதவி செய்து வந்துள்ளார். அப்போது சிறுமியை ஜார்ஜ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  இவ்விவகாரத்தை வெளியே தெரிவிக்கக்கூடாது என சிறுமியை ஜார்ஜ் போனில் மிரட்டிய போது அவருடைய பெற்றோர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  சிறுமி கடந்த வாரம் தற்கொலை செய்யவும் முயற்சி செய்துள்ளார். 

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  இதற்கிடையே உள்ளூர் காங்கிரஸ்காரர்கள்  வழக்கை திரும்ப பெறுமாறு மிரட்டியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் தெரிவித்துள்ள தகவலில், ஜார்ஜ் சிறுமியை கடந்த ஆண்டு பிப்ரவரியில் இருந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். சிறுமியின் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவரை தேடிவருகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. சிறார் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் நடவடிக்கை

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஜார்ஜை காங்கிரஸ் கட்சி சஸ்பெண்ட் செய்துள்ளது. ஜார்ஜ்க்கு எதிரான குற்றம் உண்மையென்றால், அவரை கட்சியிலிருந்து நீக்குவோம் என காங்கிரஸ் தலைவர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார். 

Next Story