மத்தியில் முழு பெரும்பான்மை அரசு அமைய வேண்டும் அதனால் மட்டுமே வலுவான முடிவுகளை எடுக்க முடியும்- பிரதமர் மோடி


மத்தியில் முழு பெரும்பான்மை அரசு அமைய வேண்டும் அதனால் மட்டுமே வலுவான முடிவுகளை எடுக்க முடியும்- பிரதமர் மோடி
x
தினத்தந்தி 30 Jan 2019 11:51 AM GMT (Updated: 30 Jan 2019 11:51 AM GMT)

மத்தியில் முழு பெரும்பான்மை அரசு அமைய வேண்டும் அத்தகைய அரசால் மட்டுமே கடுமையான மற்றும் வலுவான முடிவுகளை எடுக்க முடியும் என பிரதமர் கூறினார்.

சூரத்

குஜராத் மாநிலம் சூரத் நகரிலுள்ள விமான நிலையத்தை 354 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்வதற்காகவும், புதிய முனையம் கட்டுவதற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-

முன்பு 350 ரூபாய்க்கு விற்பனை ஆன எல்இடி விளக்குகள் தற்போது 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், நடுத்தர மக்களுக்கு செலவு மிச்சமாவதுடன், 16 ஆயிரத்து 500 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.

மத்தியில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அரசுகள் உள்கட்டமைப்பை மேம்படுத்த 25 ஆண்டுகள் தேவைப்பட்ட நிலையில், பாஜக அரசு 5 ஆண்டுகளில் அதனை செய்து முடித்துள்ளது.

மத்தியில்  மற்றொரு "முழு பெரும்பான்மை"யான அரசு  அமைய வேண்டும்  அத்தகைய அரசால் மட்டுமே "கடுமையான மற்றும் வலுவான" முடிவுகளை எடுக்க முடியும்.

முந்தைய கூட்டணி ஆட்சிகளில் முடிவு எடுக்க முடியாமல் திணறியதால் வளர்ச்சியில்  பாதிப்பு ஏற்பட்டது. மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் அமைந்த பாஜக அரசு எவ்வாறு சிறப்பாக செயல்பட முடியும் என்பதை மக்களுக்கு எடுத்துக் காட்டி உள்ளது  

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் 25 லட்சம் வீடுகளே கட்டப்பட்டன. எங்களது ஆட்சியில் 4 ஆண்டுகளிலேயே ஒரு கோடியே 30 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது.

ஹவாய் செருப்பு அணிந்த சாதாரண குடிமகனும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பதே தனது கனவு. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ரியல் எஸ்டேட் துறையில் கருப்பு பணம் ஒழிக்கப்பட்டு, நடுத்தர மக்களுக்கும் வீடு வாங்க முடிந்தது என கூறினார்.

இதனிடையே நிகழ்ச்சியை படம் பிடித்துக் கொண்டிருந்த கிஷன் ரமோலியா என்ற ஒளிப்பதிவாளர் திடீரென மயக்கமடைந்ததால் பிரதமர் மோடி பேசுவதை நிறுத்தினார். உடனடியாக மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்லுமாறு பிரதமர் அறிவுறுத்தியதை அடுத்து, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டார். 

Next Story