ராஜஸ்தானின் ராம்கார் சட்டசபை தொகுதிக்கான தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி வெற்றி


ராஜஸ்தானின் ராம்கார் சட்டசபை தொகுதிக்கான தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி வெற்றி
x
தினத்தந்தி 31 Jan 2019 10:10 AM GMT (Updated: 31 Jan 2019 10:59 AM GMT)

ராஜஸ்தானின் ராம்கார் சட்டசபை தொகுதிக்கான தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 7ந்தேதி நடைபெற்றது.  இந்த தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.  இந்த நிலையில், ராம்கார் சட்டசபை தொகுதியை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணமடைந்த நிலையில், அதற்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

இதன்பின்னர் ராம்கார் தொகுதிக்கான தேர்தல் கடந்த 28ந்தேதி நடந்தது.  இதில் 20 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.  இதன் முடிவில் ஆளும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட சபியா ஜுபைர், பாரதீய ஜனதா கட்சி வேட்பாளரை விட 12 ஆயிரத்து 228 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ஜுபைர் 44.77 சதவீத வாக்குகளும், பா.ஜ.க. வேட்பாளர் சுக்வந்த் சிங் 38.20 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர் என ராஜஸ்தான் தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த வெற்றியால் காங்கிரஸ் கட்சி 100 எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ளது.  அதன் கூட்டணியான ராஷ்டீரிய லோக் தள கட்சி ஒரு எம்.எல்.ஏ. வைத்துள்ளது.  பா.ஜ.க.வுக்கு 73 உறுப்பினர்கள் அவையில் உள்ளனர்.  

இதேபோன்று பகுஜன் சமாஜ் கட்சி 6 எம்.எல்.ஏ.க்களும், ராஷ்டீரிய லோக்தந்த்ரிக் கட்சி 3 எம்.எல்.ஏ.க்களும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மற்றும் பாரதீய பழங்குடியின கட்சி தலா 2 எம்.எல்.ஏ.க்களும் கொண்டுள்ளனர்.  13 பேர் சுயேச்சைகளாக உள்ளனர்.

Next Story