என்.எஸ்.ஜி நாடுகள் பட்டியலில் இந்தியா இணைய மீண்டும் முட்டுக்கட்டை போடும் சீனா


என்.எஸ்.ஜி நாடுகள் பட்டியலில் இந்தியா இணைய மீண்டும் முட்டுக்கட்டை போடும் சீனா
x
தினத்தந்தி 1 Feb 2019 3:43 AM GMT (Updated: 1 Feb 2019 3:43 AM GMT)

என்.எஸ்.ஜி நாடுகள் பட்டியலில் இந்தியா இணைவதற்கு சீனா தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

பெய்ஜிங்

அணுஆயுத பரவல் தடை சட்டத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்று கூறி அணுசக்தி நாடுகள் குழுவில் இந்தியாவை சேர்ப்பதற்கு சீனா மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் என்.எஸ்.ஜி.யில் அங்கம் வகிக்கும் பிரான்ஸ் அணு ஆயுத தடை பரவல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றும் அதே அடிப்படையில் இந்தியாவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என இந்தியா தெரிவித்தது. ஆனால், இந்தியாவின் முயற்சிக்கு சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. 

இந்த நிலையில், அணு ஆயுத ஒழிப்பு, அணு ஆயுத பரவல் தடுப்பு, அணு சக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்சு, சீனா ஆகிய ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகள் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தின. இந்த பேச்சுவார்த்தையில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கெங் ஷூவாங் விளக்கம் அளித்தார். அப்போது, அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இந்தியாவை அணு சக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் (என்.எஸ்.ஜி) சேர்க்க முடியாது என தெரிவித்தார். 

48 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த கூட்டமைப்பில், பெரும்பான்மையான நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அண்டை நாடான சீனா, இந்தியாவை இணைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

Next Story