சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு


சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
தினத்தந்தி 1 Feb 2019 10:26 AM IST (Updated: 1 Feb 2019 10:26 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

திருப்பதி

ஆந்திரபிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஆளும் தெலுங்குதேசம் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இதனை வலியுறுத்தி பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அண்மையில் தெலுங்குதேசம் கட்சி வெளியேறியது.

இதற்கிடையே ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி  அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஆளும்  கட்சி தெலுங்கு தேசம்  ஆந்திரபிரதேச பிரத்யேகா ஹோடா சாதனா சமிதி , ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி  கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன

தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்கள் பாராளுமன்ற கூட்டம் நடைபெறும் போது எல்லாம்  கூட்டத்தில் இந்த கோரிக்கையை நிறைவேற்றக்கோரி  போராடி வருகின்றனர். பாராளுமன்றம் முன்பு உள்ள காந்தி சிலை முன்பும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தெலுங்கு தேசம்  கட்சி சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு  எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

 ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி இன்று முழு அடைப்பு போராட்டம் ஆளும் கட்சி தெலுங்கு தேசத்தால் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை முதல்  ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஆந்திராவில் முழு அடைப்பு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.  ஆளுங்கட்சி ஆதரவுடன் நடக்கும் பந்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

Next Story