பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் விபத்து: போர் விமானம் வெடித்து சிதறியது; 2 விமானிகள் சாவு


பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் விபத்து: போர் விமானம் வெடித்து சிதறியது; 2 விமானிகள் சாவு
x
தினத்தந்தி 1 Feb 2019 10:45 PM GMT (Updated: 1 Feb 2019 9:31 PM GMT)

பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் பயிற்சியில் ஈடுபட்டபோது ராணுவ போர் விமானம் வெடித்து சிதறியது. இதில் 2 விமானிகள் உடல் கருகி பலியானார்கள்.

பெங்களூரு,

பெங்களூருவில் எச்.ஏ.எல். விமான நிலையம் உள்ளது. இங்கு போர் விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் அங்கு பயிற்சி விமானங்கள் மூலம் விமானப்படை விமானிகளுக்கு போர் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

‘மிரஜ்-2000’ என்ற வகையை சேர்ந்த போர் விமானத்தை விமானப்படையை சேர்ந்த விமானிகள் டேராடூனை சேர்ந்த சித்தார்த் நேகி (வயது 31) மற்றும் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த சமீர் அப்ரோல் (33) ஆகியோர் நேற்று வழக்கம் போல் இயக்கி சோதனையில் ஈடுபட்டனர்.

காலை 10.25 மணிக்கு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து அந்த விமானம் புறப்பட்டது. பறக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே, அந்த விமானம், விமான நிலைய வளாகத்திற்குள்ளேயே திடீரென தரையில் விழுந்து வெடித்து சிதறி நொறுங்கியது. மேலும் தீப்பிடித்து எரிந்தது. அதற்கு முன்பே விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை உடனே அறிந்துகொண்ட விமானிகள், உடனடியாக பாராசூட் மூலம் கீழே குதித்தனர்.

ஆனால் அவர்கள் தீயில் விழுந்து விட்டதாக சொல்லப்படுகிறது. சம்பவத்தை பற்றி அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்தனர்.

இதில் ஒரு விமானி அதே இடத்தில் தீயில் கருகி உயிரிழந்தார். மற்றொரு விமானி படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். அவரை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் மரணம் அடைந்தார். தீயில் இருந்து வெளியேறிய புகை ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சூழ்ந்து காணப்பட்டது.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, விமானத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர். அந்த விமானத்தின் பாகங்கள் உடைந்து சிதறி கிடந்தன. மேலும் விமானம் தீயில் எரிந்த நிலையில் எலும்புக்கூடாக காட்சியளித்தது.

இந்த சம்பவம் குறித்து விமானப்படை நிர்வாகம், விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுதான் இந்த விபத்துக்கு காரணம் என்று எச்.ஏ.எல். நிறுவனம் கூறியுள்ளது.

விமானிகள் 2 பேரின் மறைவுக்கு துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.


Next Story