எங்கள் போராட்டம் எந்த ஒரு நிறுவனத்துக்கும் எதிரானது அல்ல, மோடி அரசின் அட்டூழியங்களுக்கு எதிரானது -மம்தா பானர்ஜி


எங்கள் போராட்டம் எந்த ஒரு நிறுவனத்துக்கும் எதிரானது அல்ல, மோடி அரசின் அட்டூழியங்களுக்கு எதிரானது -மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 4 Feb 2019 4:38 PM IST (Updated: 4 Feb 2019 4:38 PM IST)
t-max-icont-min-icon

எங்கள் போராட்டம் எந்த ஒரு நிறுவனத்துக்கும் எதிரானது அல்ல, மோடி அரசின் அட்டூழியங்களுக்கு எதிரானது என மம்தா பானர்ஜி கூறினார்.

கொல்கத்தா,

எதிர்கட்சிகள் கடந்த  மாதம் கொல்கத்தாவில் நடத்திய மிகப்பெரிய பேரணி வெற்றி பெற்றதால் மத்திய அரசு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மீது பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறி உள்ளார்.

சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இரு வழக்குகள் தொடர்பாக மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் நேற்று அவரது வீட்டுக்கு சென்றனர்.

அப்போது கமிஷனரின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் போலீசார், சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். இதனிடையே மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேரடியாக போலீஸ் கமிஷனரின் வீட்டுக்கு வந்தார். இதைத்தொடர்ந்து அவர் மத்திய அரசை கண்டித்தும், அரசியல் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. தர்ணாவில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி, மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார்.

மம்தா பானர்ஜி தொடர்ந்து இன்று 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். போராட்டத்தின் போது அவர் தனது அன்றாட அரசு அலுவலக வேலைகளையும் கவனித்து கொண்டார்.

மம்தா பானர்ஜி  கூறும்போது, எங்கள் போராட்டம் எந்த ஒரு நிறுவனத்துக்கும் எதிரானது அல்ல, மோடி அரசின் அட்டூழியங்களுக்கு எதிரானது என கூறினார்.

மம்தா பானர்ஜியின் போராட்டத்திற்கு தோளோடு தோள் நிற்பதாக குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மம்தா பானர்ஜியுடன் இதுகுறித்து தொலைபேசியில் பேசியதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடத்தியதை நினைவுகூர்ந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், இதேநிலை மற்றவர்களுக்கும் ஏற்படும் என அப்போதே எச்சரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிபிஐ விவகாரத்தில் எதிர்க்கட்சிகளோடு இணைந்து மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

மேற்குவங்கத்தில் அரங்கேறியுள்ளது, அரசமைப்புச் சட்டம் உறுதிசெய்துள்ள உரிமைகளுக்கு எதிரான நிகழ்வுகள் என்று குறிப்பிட்டுள்ள கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, மேற்குவங்க முதலமைச்சருக்கு ஆதரவாக நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தோல்வி பயத்தால் சிபிஐ அமைப்பை தேர்தல் ஏஜெண்டுகள் போல மத்திய அரசு பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ள சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், இது ஜனநாயகத்திற்கும், அரசமைப்புக்கும் எதிரானது என்று கூறியுள்ளார்.

மேற்குவங்கம் போன்ற மிகப்பெரிய மாநிலத்தின் முதலமைச்சர் தர்ணாவில் ஈடுபடுகிறார் என்றால் அது தீவிரமான பிரச்சினை என்று கூறியுள்ள சிவசேனா கட்சி, சிபிஐ தவறாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால் அது நாட்டின் கண்ணியத்திற்கு ஏற்பட்ட களங்கம் என்று கூறியுள்ளது.

சாரதா சீட்டுத்திட்ட மோசடியில் மூளையாகச் செயல்பட்டவர் பாஜகவில் சேரும் வரை மத்திய அரசு அமைதியாக இருந்ததாக மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார். தற்போது ஊழலை மறைப்பதற்கும், ஊழல் பேர்வழிகளை காப்பாற்றுவதற்கும் கொல்கத்தாவில் பாஜகவும் திரிணாமுல் காங்கிரசும் நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
1 More update

Next Story