கடத்தலில் ஈடுபட்ட சுங்க அதிகாரி உள்பட 7 பேர் டெல்லி விமான நிலையத்தில் கைது
கடத்தலில் ஈடுபட்ட சுங்க அதிகாரி உள்பட 7 பேர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
புதுடெல்லி,
டெல்லி விமான நிலையத்தில் இரு தனித்தனி விமானங்களில் 2 பேர் கொண்ட ஒரு குழு மற்றும் 4 பேர் கொண்ட மற்றொரு குழு என 6 பேர் வந்திறங்கினர். அவர்களை சுங்க துறை மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் கொண்ட குழு சோதனை போட்டது.
இதில், அவர்களிடம் இருந்து வெளிநாட்டு வகை சிகரெட்டு பாக்கெட்டுகள், 14 ஆளில்லா விமானங்கள், 18 உயர்ரக கேமிராக்கள் மற்றும் 16 வெளிநாட்டு வகை மதுபானங்கள் என ரூ.1.09 கோடி மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த 6 பேரில் ஒரு பயணி கடத்தல் கும்பலின் தலைவன் என விசாரணையில் ஒத்து கொண்டுள்ளான். டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியை சேர்ந்த அந்நபர் விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக சுங்க துறை அதிகாரிகளை மிரட்டியதுடன், மற்ற கடத்தல்காரர்களுடன் சேர்ந்து தாக்குதலும் நடத்தியுள்ளான்.
இந்த சமயத்தில் 3 பேர் அங்கிருந்து தப்பி விட்டனர். அதன்பின்னர் அவர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு சுங்க துறை அதிகாரி ஒருவர் உடந்தையாக இருந்துள்ளார் என சுங்க துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த அதிகாரியும் கைது செய்யப்பட்டார்.
கடத்தல் கும்பல் தலைவன் கடந்த 2 வருடங்களில் ரூ.6 முதல் ரூ.7 கோடி மதிப்பிலான பொருட்களை கடத்தியுள்ளான். இதனால் மொத்த கடத்தல் பொருட்களின் மதிப்பு ரூ.7.09 கோடியாக உள்ளது என அறிக்கை தெரிவிக்கின்றது.
Related Tags :
Next Story