கொல்கத்தா போலீஸ் கமிஷனரை விசாரிக்கும் விவகாரம்: சி.பி.ஐ. மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை


கொல்கத்தா போலீஸ் கமிஷனரை விசாரிக்கும் விவகாரம்: சி.பி.ஐ. மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
x
தினத்தந்தி 5 Feb 2019 2:56 AM GMT (Updated: 5 Feb 2019 2:56 AM GMT)

கொல்கத்தா போலீஸ் கமிஷனரை விசாரிக்கும் விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ. தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று (செவ்வாய்க் கிழமை) விசாரணைக்கு வருகிறது.

புதுடெல்லி, 

சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்தவும், வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை பெறவும் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது அவர்கள் உள்ளூர் போலீசாரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதும், பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போலீஸ் கமிஷனரின் வீட்டுக்கு நேரில் சென்றதும், மத்திய அரசை கண்டித்தும், அரசியல் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த நிலையில் கொல்கத்தா விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் 2 மனுக்களை தாக்கல் செய்தது. 

அதில் ஒரு மனுவில், “பலமுறை சம்மன் அனுப்பியும் கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமார், சிட்பண்ட் மோசடி தொடர்பான விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களையும் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கவில்லை. எனவே அந்த ஆவணங்களை சி.பி.ஐ. வசம் போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமார் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

இதேபோல் சி.பி.ஐ. தாக்கல் செய்த மற்றொரு மனுவில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில்தான் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த சென்றதாகவும், அவர்களை மேற்கு வங்காள போலீஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதும், அரசியல்வாதிகளுடன் இணைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை என்றும், எனவே அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று காலை சி.பி.ஐ. தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, கொல்கத்தாவில் தற்போது நிலவி வரும் பிரச்சினை தொடர்பாக மனுக்கள் தாக்கல் செய்திருப்பதாகவும், இதை அவசர வழக்காக கருதி இன்று (நேற்று) பிற்பகல் 2 மணிக்கே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அவர் தொடர்ந்து கூறியதாவது:-


இந்த விஷயம் மிகவும் தீவிரம் அடைந்து வருவதால், மேற்கு வங்காளத்தில் நிலைமை அசாதாரணமாக உள்ளது. அந்த மாநில போலீசார் சி.பி.ஐ. அதிகாரிகளை சட்டத்துக்கு புறம்பாக போலீஸ் நிலையத்தில் வைத்து உள்ளனர். இது தொடர்பாக நாங்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகப்போகிறோம் என்பதை அறிந்து கொண்ட பிறகு அவர்களை விடுவித்து இருக்கின்றனர்.

சி.பி.ஐ. இணை இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவஸ்தவ் வீட்டை மேற்கு வங்காள போலீசார் முற்றுகையிட்டு உள்ளனர். பின்னர் இணை இயக்குனர் ஊடகங்களிடம், இந்த முற்றுகை பற்றி விரிவாக பேசியதும் அவர்கள் அங்கிருந்து விலகி இருக்கின்றனர். கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமார் திரிணாமுல் காங்கிரசார் மேற்கொண்ட தர்ணாவில் வெளிப்படையாக பங்கேற்று இருக்கிறார்.

மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்படும் ஆபத்தும் உள்ளது. எனவே சுப்ரீம் கோர்ட்டு உடனடியாக தலையிட்டு போலீஸ் கமிஷனரிடம் உள்ள அனைத்து ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களையும் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க உத்தரவிடவும், முறை தவறி நடந்த மேற்கு வங்காள போலீசார் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும் எங்கள் மனுவில் கோரிக்கை விடுத்து இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேற்கு வங்காள அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சி.பி.ஐ. தரப்பில் தவறான தகவல்கள் அளிக்கப்படுவதாகவும், சி.பி.ஐ அனுப்பி வைத்த கேள்விகளுக்கு போலீஸ் கமிஷனர் முறையாக பதில் அளித்து இருக்கிறார் என்றும், மேலும் அவரை விசாரிக்கும் வகையில் முதல் தகவல் அறிக்கை எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அதற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இதுபோன்ற குறுக்கீட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இது தேவையற்றது என்றும் கூறினார். அத்துடன், மின்னணு வடிவில் இருக்கும் ஆதாரங்களை அழித்தால், அவற்றை திரும்ப எடுக்க முடியும் என்றும் கூறினார். “ஒருவேளை போலீஸ் கமிஷனரோ அல்லது வேறு எந்த அதிகாரியோ அந்த ஆதாரங்களை அழிக்க முயன்றால், நாங்கள் எடுக்கும் நடவடிக்கை அவர்கள் வருந்தக்கூடிய அளவுக்கு கடுமையாக இருக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.

பின்னர் தலைமை நீதிபதி சி.பி.ஐ. தரப்பினரை நோக்கி, “உங்கள் மனுக்களை காலையில் படித்துவிட்டுத்தான் வந்திருக்கிறோம். அதனால்தான் நாங்கள் வருவதற்கு சற்று தாமதமானது. அந்த மனுவில் ஆதாரங்கள் அழிக்கப்பட்டது பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த வழக்கு செவ்வாய்க் கிழமை (இன்று) விசாரிக்கப்படும்” என்று கூறினார்.


இதற்கிடையே, விசாரணை நடத்துவதற்காக போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமாரின் வீட்டுக்குள் சி.பி.ஐ. அதிகாரிகள் நுழைய முயன்றது ஐகோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்துள்ள தடை உத்தரவுக்கு எதிரானது என்று கூறி கொல்கத்தா ஐகோர்ட்டில் மேற்கு வங்காள அரசின் சார்பில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேற்கு வங்காள அரசின் அட்வகேட் ஜெனரல் ஐகோர்ட்டில் நீதிபதி சிவகாந்த் பிரசாத் முன்பு ஆஜராகி, இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு மத்திய அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க மறுத்த நீதிபதி, மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை (இன்று ) நடைபெறும் என்று கூறினார்.


Next Story