உங்கள் சான்றிதழ் எனக்கு தேவையில்லை: ராகுலுக்கு நிதின் கட்காரி பதில்


உங்கள் சான்றிதழ் எனக்கு தேவையில்லை: ராகுலுக்கு நிதின் கட்காரி பதில்
x
தினத்தந்தி 5 Feb 2019 8:40 AM GMT (Updated: 5 Feb 2019 8:40 AM GMT)

உங்கள் சான்றிதழ் எனக்கு தேவையில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நிதின் கட்காரி பதிலடி கொடுத்துள்ளார்.

புதுடெல்லி,

பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான நிதின் கட்காரி கடந்த 2-ந் தேதி நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பா.ஜனதா தொண்டர்கள் முதலில் தங்கள் குடும்பத்தை கவனிக்க வேண்டும் எனவும், குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்யாத ஒருவரால் நாட்டை கவனிக்க முடியாது என்றும் கூறினார்.

முன்னதாக ‘தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தலைவர்களை மக்கள் அடிப்பார்கள்’ என்று கட்காரி கூறியிருந்தார். இவை அனைத்தும் பிரதமர் மோடியை மனதில் வைத்தே கட்காரி கூறியதாக காங்கிரசார் கூறி வருகின்றனர். மேலும் பிரதமர் பதவிக்கு கட்காரி குறி வைப்பதாகவும் பேச்சு நிலவுகிறது.

இந்த சூழலில், கட்காரியின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்து இருந்தார். ராகுல் காந்தி தனது டுவிட்டரில்,  ‘கட்காரிஜி வாழ்த்துக்கள். பா.ஜனதாவில் நீங்கள் மட்டும்தான் சிறிது துணிச்சல் உள்ளவர். இதைப்போல ரபேல் மற்றும் அனில் அம்பானி, விவசாயிகள் துயர் மற்றும் ஜனநாயக அமைப்புகள் சீரழிப்பு போன்றவை குறித்தும் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இது பா.ஜனதாவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில், ராகுல் ஜி, உங்களது சான்றிதழ் எனக்கு தேவை இல்லை. பத்திரிகையில் தவறாக வெளியான ஒரு செய்தியை அடிப்படையாக வைத்துக்கொண்டு நீங்கள் மத்திய அரசை தாக்கி பேசுவது ஆச்சரியமாக உள்ளது. தலைவர் பொறுப்பில் இருப்பவர்கள் பொறுப்பாக பேச வேண்டும். தலைவராக இருப்பவர் நல்ல புரியும் சக்தி கொண்டவராக திகழ வேண்டும். இது இரண்டும் உங்களிடம் இல்லை.

காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் உள்ள முக்கிய வேறுபாடே அரசியலமைப்பு சட்டத்தில் கொண்டுள்ள நம்பிக்கை தான். காங்கிரசுக்கு அரசியல் சட்டங்களில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. உங்களது செயல்பாடுகளும் அதைத்தான் காட்டுகின்றன.விவசாயிகள் பிரச்சினையில் நீங்கள் தவறான வழிகாட்டுதல்களை மேற்கொண்டு இருக்கிறீர்கள். எனவே மீண்டும் மோடி தலைமையில்தான் மத்தியில் ஆட்சி மலரும். நாங்கள் தொடர்ந்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வோம்” என தெரிவித்து உள்ளார்.

Next Story