சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டும் ஊழல் கட்சிகள் என தெரிந்துள்ளது; யெச்சூரி


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டும் ஊழல் கட்சிகள் என தெரிந்துள்ளது; யெச்சூரி
x
தினத்தந்தி 5 Feb 2019 11:42 AM GMT (Updated: 5 Feb 2019 11:42 AM GMT)

சிட்பண்ட் மோசடி வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இரண்டும் ஊழல் கட்சிகளென சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் தெரிய வந்துள்ளது என்று சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தில் சிட்பண்ட் மோசடி வழக்கு விசாரணைக்காக கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டுக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.  பின் விடுவிக்கப்பட்டனர்.

இதனிடையே ராஜீவின் வீட்டுக்கு சென்ற முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மத்திய அரசை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பினை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், சி.பி.ஐ. விசாரணைக்கு ராஜீவ் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவரை கைது செய்ய கூடாது என்றும் கட்டாய வாக்குமூலம் பெற கூடாது என்றும் தெரிவித்தது.

தொடர்ந்து மேற்கு வங்க தலைமை செயலாளர், காவல் துறை இயக்குநர் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதில் அளிக்கும்படியும் உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, சி.பி.ஐ. தன்னிச்சையாக விசாரணை மேற்கொண்டால் அது ஆட்சேபனைக்கு உரியது.

நீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. மேற்கொள்ளும் வழக்கு விசாரணை, மாநில அரசின் அதிகாரத்தின் மீது தாக்குதல் நடத்துவது ஆகாது.  இதனால் இது மத்திய மற்றும் மாநில உறவுக்கு இடையேயான விவகாரம் இல்லை என கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து, ஊழல் கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வை அவர்களுக்கு உரிய இடத்தில் சுப்ரீம் கோர்ட்டு வைத்துள்ளது.  பணமோசடி பற்றி திரிணாமுல் காங்கிரசின் தலைமையிடம் கூட விசாரணை நடத்த வேண்டும்.

அக்கட்சியின் பல எம்.பி.க்கள் மீது கைது மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது போன்ற பல நடவடிக்கைகள் முன்பே எடுக்கப்பட்டு உள்ளன.  விசாரணை நடத்த, ஊழல்வாதிகளை வெளியே கொண்டு வர பா.ஜ.க. ஏன் 5 வருடங்கள் காத்திருந்தது? என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story