மேற்கு வங்காள விவகாரத்தில் ஆளும் கட்சியுடன் மோதல்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு


மேற்கு வங்காள விவகாரத்தில் ஆளும் கட்சியுடன் மோதல்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 5 Feb 2019 11:00 PM GMT (Updated: 5 Feb 2019 9:55 PM GMT)

மேற்கு வங்காள விவகாரத்தில் ஆளும் கட்சியுடன் மோதலில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மாநிலங்களவை 2–ம் நாளாக முடங்கியது.

புதுடெல்லி,

மக்களவை நேற்று கூடியபோது, சி.பி.ஐ. தவறாக பயன்படுத்தப்படுவதாக திரிணாமுல் காங்கிரஸ் புயலைக் கிளப்பியது. அந்த கட்சி உறுப்பினர்கள் சபையில் அமளியில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ‘‘உங்களுக்கு சி.பி.ஐ. மீது நம்பிக்கை கிடையாது. சுப்ரீம் கோர்ட்டின்மீதும் நம்பிக்கை இல்லை. சபையை நடத்தவிடுங்கள். அந்தந்த அமைப்புகள், அவற்றின் கடமையை செய்ய விடுங்கள்’’ என்று கண்டித்தார்.

அமளியால் சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடியபோது, கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக சபையின் மையப்பகுதியை முற்றுகையிட்டதால் பெரும் அமளி ஏற்பட்டது. சபையை மீண்டும், மீண்டும் ஒத்திவைக்க நேரிட்டது.

மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் விவாதத்துக்கு வந்தது. அப்போது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுதீப் பந்தோபாத்யாயும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயும் இந்த விவாதத்தை புதன்கிழமைக்கு (இன்று) எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆனால் அதை சபாநாயகர் சுமித்ரா மகாஜனும், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கும் நிராகரித்தனர்.

அதைத்தொடர்ந்து விவாதத்தை பாரதீய ஜனதா எம்.பி. ஹுக்கும் நாராயண் யாதவ், ஜகதாம்பிகா பாலும் தொடங்கினர். தொடர்ந்து பிஜூ ஜனதா தள தலைவர் மகாதேவ் பேசினார்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுதீப் பந்தோபாத்யாய், மேற்கு வங்காள விவகாரத்தை எழுப்பினார். ‘‘இந்த விவகாரம் முக்கியமான பிரச்சினை, இதில் பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை அளிக்க வேண்டும் என காத்திருக்கிறோம். ஆனால் பிரதமர் அவையில் இல்லை. எனவே நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்’’ என கூறினார். அவரது கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசுவதற்கு தங்களுக்குத்தான் வாய்ப்பு தரவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறினர். அப்போது காங்கிரஸ் கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயிடம் சபாநாயகர் சுமித்ரா மகாஜன், உங்களை அழைத்தபோது நீங்கள் சபையில் இல்லை என்றார்.

இதில் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பாரதீய ஜனதா எம்.பி. ஹுக்கம் நாராயண் யாதவை பேச அழைத்தபோது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு கோ‌ஷங்களை எழுப்பினர்.

ஆனால் சபையில் அமைதி காக்குமாறு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கேட்டுக்கொண்டும் அது பலன் தரவில்லை. ஹுக்கம் நாராயண் யாதவ், ‘‘ஊழல் மற்றும் சமூக விரோத சக்திகள் பிரதமர் மோடிக்கு எதிராக கரம் கோர்க்கின்றன’’ என கூறியபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக எழுந்து நின்று, அதை சபைக்குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தினர்.

ஒரு பக்கம் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே வாய் சண்டை தொடர்ந்தது. இன்னொரு பக்கம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபருபா பொத்தார், பா.ஜனதா கூட்டணி கட்சியான லோக்ஜனசக்தி எம்.பி. வீணா தேவி இருவரும் ஒருவருக்கொருவர் அச்சுறுத்தம் வகையில் சைகை செய்தனர்.

அதைத்தொடர்ந்து சபை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் சபை கூடியபோது ஹுக்கம் நாராயண் யாதவ், மகாபாரதத்தை குறிப்பிட்டு, வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் நல்லவர்களுக்கும், தவறானவர்களுக்கும் இடையேயான போர் என வர்ணித்தார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயை பேச அழைத்தபோது அவர், ‘‘சபையில் அமைதி இல்லை, விவாதத்தை நாளைக்கு (இன்று) நடத்தலாம், ஒத்திபோடுங்கள்’’ என சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் வலியுறுத்தினார்.

அவரோ, ‘‘புதன்கிழமை சபை அமைதியாக நடக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?’’ என மடக்கினார். மல்லிகார்ஜூன கார்கே, ‘‘அரசு பல தவறுகளை செய்கிறபோத எப்படி எதிர்க்கட்சிகள் அமைதியாக இருக்க முடியும்?’’ என வினவினார்.

விவாதத்தை ஒத்தி போடுமாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுதீப் பந்தோபாத்யாயும் வலியுறுத்தினார். தொடர் அமளியால் மக்களவையில் ஆக்கப்பூர்வமான எந்த செயலும் நேற்று நடைபெற முடியவில்லை.

மாநிலங்களவையிலும் இதே நிலைமைதான் நிலவியது. அங்கும், சி.பி.ஐ.யை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாகக் கூறி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். சபை மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு இந்த விவகாரத்தை விசாரிக்கிறபோது சபையில் போராட்டம் நடத்துவதில் ஒழுங்கு இல்லை என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி விஜய் கோயல் கூறினார்.

எதிர்க்கட்சிகள் போர்க்கோலம் பூண்டன. அரசுக்கு எதிராக கோ‌ஷங்களை முழங்கின. சபையில் எந்த அலுவலையும் நடத்த முடியவில்லை. சபையை அமைதியாக நடத்த சபைத்தலைவர் வெங்கையா நாயுடு முயற்சித்தார். ஆனால் அது பலன் தரவில்லை. தொடர்ந்து இரண்டாவது நாளாக சபை நடவடிக்கைகள் முடங்கின.


Next Story