பாலியல் வழக்கு; கன்னியாஸ்திரிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய முதல் மந்திரிக்கு கடிதம்


பாலியல் வழக்கு; கன்னியாஸ்திரிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய முதல் மந்திரிக்கு கடிதம்
x
தினத்தந்தி 6 Feb 2019 1:54 PM GMT (Updated: 6 Feb 2019 1:54 PM GMT)

பாலியல் புகாரில் பேராயருக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கேரள முதல் மந்திரிக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

புதுடெல்லி,

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த வருடம், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்பாக இருந்த பிராங்கோ மூலக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.

ஆனால் புகார் அளித்து 76 நாட்களுக்கு மேல் கடந்தும் விசாரணை நிறைவடையாததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக அவரது விடுதியில் உடன் தங்கியிருந்த மற்ற கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் குதித்தனர்.

இவ்வழக்கில் மூலக்கலுக்கு எதிரான அறிக்கையை அளித்த முக்கிய சாட்சி அப்பாஸ் குரியாகோஸ் கத்துதாரா( வயது 67) பஞ்சாபின் ஜலந்தர் நகரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.  இந்த வழக்கில் மூலக்கல் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில், பேராயரை கைது செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 5 கன்னியாஸ்திரிகளில் 4 பேரை கேரளாவில் உள்ள கான்வென்ட்டில் இருந்து வெளியேறும்படி சமீபத்தில் அதன் மிஷனெரி தலைமை உத்தரவிட்டது.

இதனை அடுத்து 5வது கன்னியாஸ்திரியான நீனா ரோஸ் மற்றும் பிற கன்னியாஸ்திரிகள் முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதினர்.  இதில் ரோஸ், என்னை தனிமைப்படுத்தி, துன்புறுத்துவது அவர்களின் நோக்கம்.  இதுபோன்ற சூழல் ஏற்பட்டால் எனது வாழ்க்கை ஆபத்தில் சிக்கி விடும் என எழுதினார்.

சமூகத்தின் ஒரு பகுதியாக மற்றும் அன்றாட மத வாழ்க்கையில் இணைந்து செயல்பட ரோஸ் மறுக்கிறார் என குற்றச்சாட்டு கூறி அவரையும் இடமாறுதல் செய்து மிஷனெரிகளுக்கான இயேசு சபையின் நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.  அதில், கற்பழிப்பு குற்றவாளி பேராயர் மூலக்கல்லுக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரிகளுக்கு பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

இந்த கடிதத்தில், வழக்கில் முக்கிய சாட்சிகளான கன்னியாஸ்திரிகளுக்கு நெருக்கடி அளிக்கவும் மற்றும் அச்சுறுத்தவும் கடந்த வருடத்தில் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  இதனை ஆணையத்தினை அணுகிய 2 கன்னியாஸ்திரிகள் தெரிவித்து உள்ளனர்.

தங்களுக்கு தொலைதூர பகுதிகளுக்கு இடமாற்றம் அளிப்பது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தின் தீவிர தன்மையை கவனத்தில் கொண்டு புகார் அளித்தவர்கள், பாதிக்கப்பட்டவர் மற்றும் பிற கன்னியாஸ்திரிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் நீங்கள் தலையிட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பேராயருக்கு எதிராக உள்ள வழக்கின் சாட்சியங்கள் வலுவிழந்து போகாமல் தடுப்பதனை உறுதி செய்யும் முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  இதனால் நீதி வெளிவரும் என்றும் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

Next Story