ரபேல் ஒப்பந்தம், தேச பாதுகாப்பு குறித்து என்னுடன் 5 நிமிடம் விவாதிக்க தயாரா? - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்


ரபேல் ஒப்பந்தம், தேச பாதுகாப்பு குறித்து என்னுடன் 5 நிமிடம் விவாதிக்க தயாரா? - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்
x
தினத்தந்தி 7 Feb 2019 11:30 PM GMT (Updated: 7 Feb 2019 9:49 PM GMT)

ரபேல் ஒப்பந்தம், தேச பாதுகாப்பு குறித்து என்னுடன் 5 நிமிடம் விவாதிக்க தயாரா என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.

புதுடெல்லி, 

பிரதமர் மோடி பயந்த நபர். ரபேல் ஒப்பந்தம், தேச பாதுகாப்பு ஆகியவை குறித்து என்னுடன் 5 நிமிடம் அவர் விவாதிக்க தயாரா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

டெல்லியில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு கூட்டம் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடியுடன் 5 ஆண்டுகள் நான் சண்டையிட்டதன் மூலம் அவரது குணத்தை நான் புரிந்துகொண்டேன். பா.ஜனதா கட்சியினர் நரேந்திர மோடியை என்னுடன் ஒரே மேடையில் நின்று 5 நிமிடம் தேச பாதுகாப்பு, ரபேல் ஒப்பந்தம் குறித்து விவாதிக்க சொல்லுங்கள். அதற்கு அவர் தயாரா?

அவர் பயந்த நபர். அதை நான் உணர்ந்து இருக்கிறேன். அவர் முன்பு யாராவது நான் பின்வாங்க மாட்டேன் என்று சொன்னால் அவர் பயந்துவிடுவார்.

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா, பிரதமர் மோடி ஆகியோரை காங்கிரஸ் தொண்டர்கள் வலிமையுடன் எதிர்கொள்ள வேண் டும். அப்படி காங்கிரஸ் தொண்டர்கள் ஒன்றிணைந்து நின்றால் அவர்கள் ஓடிவிடுவார்கள். அவர்கள் கோழைகள்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் நாம் வெற்றி மட்டும் பெறவில்லை. அந்த மாநிலங்களில் உள்ள நீதித்துறை முதல் தேர்தல் கமிஷன் வரை திணிக்கப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களை நீக்குவோம்.

மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா ஒரு சிறப்பு அமைச்சகம் ஏற்படுத்தி ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கு மட்டுமே ரூ.800 கோடி வழங்கப்பட்டுள்ளதாக நமது முதல்-மந்திரி கமல்நாத் கூறியிருக்கிறார். அரசு அலுவலகங்களில் உள்ள அவர்களை ஒவ்வொருவராக நீக்குவோம். நீங்கள் இந்தியாவின் அதிகாரிகளாக இருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். அதிகாரிகளாக அல்ல.

மொழி, மதம், சாதி ஆகியவைகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து இந்தியர்களுக்கும் காங்கிரஸ் பாதுகாப்பாக இருக்கும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கம் தனக்கென ஒரு அரசியலமைப்பு உருவாக்கி நாட்டை நாக்பூரில் இருந்து இயக்குவது தான்.

சி.பி.ஐ. தலைவர் பிரதமர் நரேந்திர மோடியை விசாரிக்க விரும்பினால், அவரை நீக்கிவிட்டு அந்த இடத்தில் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரரை நியமிப்பார்கள். நாட்டில் உள்ள அனைத்து அரசியல் அமைப்புகளையும் முடக்கிவிட நினைக்கிறார்கள்.

மோடி பிரதமராக இருந்தாலும், அரசை நடத்துவது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தான். சுப்ரீம் கோர்ட்டில் 4 நீதிபதிகள் வெளியில் வந்து, எங்களை வேலை செய்ய அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று கூறுகின்றனர். நீதிபதி லோயா, பா.ஜனதா தலைவர் அமித்ஷா சுப்ரீம் கோர்ட்டு அதன் பணியை செய்யவிடாமல் தடுக்கிறார் என்று மறைமுகமாக கூறினார்.

ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜனதாவும் தாங்கள் இந்தியாவைவிட மேலானவர்கள் என கருதுகிறார்கள். ஆனால் இன்னும் 3 மாதங்களில் அப்படி இல்லை என்பதை நாட்டு மக்கள் அவர்களுக்கு புரியவைப்பார்கள்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் நாட்டை உலுக்கும்விதமாக சில அறிவிப்புகளை தரவேண்டும். மோடி 15 தொழில் அதிபர்களுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை கொடுத்தார் என்றால், நாம் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானமாக பணத்தை அவர்களது வங்கி கணக்கில் செலுத்துவோம். இது உலகிலேயே முதலாவது திட்டமாக இருக்கும். இதன்மூலம் வறுமையை நீக்குவோம். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

பிரியங்கா முதல் கூட்டத்தில் கலந்துகொண்டார்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா கிழக்கு உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவர் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் முதல்முறையாக நேற்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அனைத்து பொதுச்செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் கூட்டத்தை நேற்று கூட்டியிருந்தார். நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராவது குறித்து அவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பிரியங்காவும் கலந்துகொண்டார்.


Next Story