என்.டி. ராமாராவின் முதுகில் குத்தியவர் சந்திரபாபு நாயுடு -பிரதமர் மோடி கடும் தாக்கு


என்.டி. ராமாராவின் முதுகில் குத்தியவர் சந்திரபாபு நாயுடு -பிரதமர் மோடி கடும் தாக்கு
x
தினத்தந்தி 10 Feb 2019 12:28 PM GMT (Updated: 10 Feb 2019 12:28 PM GMT)

என்.டி.ராமாராவின் முதுகில் குத்தியவர் சந்திரபாபு நாயுடு என பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்தார்.


ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாத விவகாரத்தில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சிகளை ஒன்றாக இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். பா.ஜனதா கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் கட்சி விலகிய பின்னர் பிரதமர் மோடி முதல் முறையாக இன்று ஆந்திர பிரதேசம் சென்றார். அங்கு அவருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டது. கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டது, கருப்புக்கொடி காட்டப்பட்டது.
 
போராட்டங்களுக்கு மத்தியில் குண்டூர் நகரில் பா.ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசுகையில் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். 

காங்கிரஸ் இல்லாத ஆந்திரா என்று மாற்றத்தான் என்.டி. ராமாராவ் கட்சி தொடங்கினார்.  மாநிலங்களை உதாசினப்படுத்திய மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரசின் அகங்காரத்தையும் அடக்கினார். ஆனால், அவரை பின்பற்றி கட்சிக்கு வந்ததாகக் கூறும் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார். என்னைப் பொறுத்தவரை அரசியலில் மூத்தவர் சந்திரபாபு நாயுடுதான். எப்படி என்றால், தேர்தலில் தோல்வி அடைவது, கூட்டணி மாறுவது, மாமனாரை முதுகில் குத்துவது போன்றவற்றில் என்னைக் காட்டிலும் சந்திரபாபு நாயுடு சீனியர். 

இதில் அவர் சீனியர் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. சந்திரபாபு நாயுடு  சீனியர் என்பதால், ஒருபோதும் நான் மரியாதைக் குறைவாக நடந்தது இல்லை என்றார் பிரதமர் மோடி.

நாங்கள் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த வாக்குறுதியைக் காட்டிலும் அதிகமான நல்ல விஷங்களும், நிதியும் அளித்துவிட்டோம். ஆந்திராவை மேம்படுத்துவேன் என்ற  சந்திரபாபு நாயுடு இப்போது தன்னுடை மகன் என்.லோகேஷ் வளர்ச்சிக்கு ஆந்திராவைக் கொள்ளையடிக்கிறார் எனவும் விமர்சனம் செய்துள்ளார் பிரதமர் மோடி. 

Next Story