மும்பையில் ரூ.39 கோடி போதைப்பொருள் பறிமுதல் - வெளிநாட்டை சேர்ந்த 4 பேர் கைது


மும்பையில் ரூ.39 கோடி போதைப்பொருள் பறிமுதல் - வெளிநாட்டை சேர்ந்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 10 Feb 2019 9:00 PM GMT (Updated: 10 Feb 2019 7:58 PM GMT)

மும்பையில் ரூ.39 கோடி போதைப்பொருள் கடத்தியதாக, வெளிநாட்டை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை, 

மும்பை அந்தேரி பகுதியில் வெளிநாட்டிற்கு கூரியர் நிறுவனத்தின் மூலம் போதைப்பொருள் கடத்த உள்ளதாக வந்த தகவலின் பேரில் போலீசார், அந்த பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது பெரிய பார்சலுடன் நடந்து சென்ற வெளிநாட்டை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதை பிரித்து சோதனையிட்டபோது, ஜன்னலுக்கு பயன்படுத்தும் திரைச்சீலைகள் இருந்தன. அவற்றில் பெரிய வளையங்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த வளையங்களை உடைத்து பார்த்தபோது அதில் 6 கிலோ 492 கிராம் எடையுள்ள ‘கோகைன்’ போதைப்பொருள் மறைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கூரியர் மூலம் வெளிநாட்டுக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய பிரேசில் நாட்டை சேர்ந்த பெண் கார்ல பிண்டே (வயது 35), நைஜீரியாவை சேர்ந்த நீரஸ் ஒகோவா (35), சைமன் (32), மைக்கேல் ஓவ் (29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.38 கோடியே 95 லட்சம் என அவர்கள் தெரிவித்தனர்.

Next Story