“ஆந்திராவின் நலனுக்காகவே காங்கிரசுடன் கைகோர்த்துள்ளேன்” - மோடி குற்றச்சாட்டுக்கு சந்திரபாபு நாயுடு பதில்


“ஆந்திராவின் நலனுக்காகவே காங்கிரசுடன் கைகோர்த்துள்ளேன்” - மோடி குற்றச்சாட்டுக்கு சந்திரபாபு நாயுடு பதில்
x
தினத்தந்தி 10 Feb 2019 10:45 PM GMT (Updated: 10 Feb 2019 9:16 PM GMT)

ஆந்திராவின் நலனுக்காகவே காங்கிரசுடன் கைகோர்த்துள்ளேன் என்று மோடி குற்றச்சாட்டுக்கு சந்திரபாபு நாயுடு பதில் அளித்தார்.

விஜயவாடா, 

பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, “காங்கிரசால் அவமானப்படுத்தப்பட்டதால் என்.டி.ராமாராவ் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார். காங்கிரசை ‘துஷ்டன்’ என்று வர்ணித்தார். ஆனால், தற்போதைய தெலுங்கு தேசம் தலைவர் (சந்திரபாபு நாயுடு) காங்கிரசுடன் கைகோர்த்துள்ளார். இதைக்கண்டு என்.டி.ராமாராவின் ஆன்மா வேதனைப்படும்” என்று அவர் கூறினார்.

மேலும், சந்திரபாபு நாயுடுவை ‘லோகேஷின் தந்தை’ என்று அவர் குறிப்பிட்டார். (சந்திரபாபு நாயுடுவின் மகன் பெயர் லோகேஷ்).

இந்நிலையில், விஜயவாடாவில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு பதிலடி கொடுத்தார். கருப்பு சட்டை அணிந்திருந்த அவர் பேசியதாவது:-

என்னை தனிப்பட்ட முறையில் மோடி விமர்சித்துள்ளார். ‘லோகேஷின் தந்தை’ என்று என்னை கேலியாக கூறியுள்ளார். லோகேஷ், என் மகன். எனக்கு குடும்பம் இருக்கிறது. குடும்ப உறவு இருக்கிறது. குடும்ப அமைப்புக்கு நான் முக்கியத்துவம் அளிக்கிறேன்.

மோடி கொண்டு வந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஒரு துக்ளக் பாணி சட்டம்.

மத்திய அரசு அளிக்கும் நிதிக்கு ஆந்திர அரசு கணக்கு காட்டுவது இல்லை என்றும் மோடி கூறி இருக்கிறார். அதற்கென மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி இருக்கிறார். கணக்கை அவர் பார்த்துக்கொள்வார்.

நான் காங்கிரசுடன் கைகோர்த்து இருப்பதையும் மோடி விமர்சித்துள்ளார். அந்த காலத்தில், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை எதிர்த்து என்.டி.ராமாராவ் போராடினார். இப்போது, ஆந்திரா நலனுக்காக நான் காங்கிரசுடன் கைகோர்த்துள்ளேன்.

நான் 11-ந் தேதி (இன்று) டெல்லி சென்று ‘தர்ணா போராட்டம்’ நடத்தப்போகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story