கட்சி பொறுப்பேற்ற பிறகு இன்று முதல் முறையாக உ.பி செல்லும் பிரியங்கா காந்தி


கட்சி பொறுப்பேற்ற பிறகு இன்று முதல் முறையாக உ.பி செல்லும் பிரியங்கா காந்தி
x
தினத்தந்தி 11 Feb 2019 4:00 AM GMT (Updated: 11 Feb 2019 4:00 AM GMT)

கட்சி பொறுப்பேற்ற பிறகு இன்று முதல் முறையாக பிரியங்கா காந்தி உத்தர பிரதேசம் செல்கிறார்.

லக்னோ,

உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சியின் கிழக்கு பிராந்திய பொறுப்பாளராக  பிரியங்கா காந்தி, கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கட்சித்தலைவர் ராகுல் காந்தியால் அறிவிக்கப்பட்டார். பிரியங்கா காந்தி நேரடி அரசியலில் களம் இறங்கியிருப்பது வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சிக்கு பெரும் பலம் சேர்க்கும் காங்கிரஸ் தொண்டர்கள் நம்புகின்றனர். 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின்  பொறுப்பு ஏற்ற பின்னர், ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி இன்று உத்தர பிரதேசம் செல்கிறார். அவருடன் உத்தர பிரதேசத்தின் மேற்கு மண்டல காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ஜியோதிராதித்ய சிந்தியாவும் உத்தர பிரதேசம் செல்கின்றனர். 

பிரியங்காவின் வருகை உத்தர பிரதேச காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை  ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து நேற்று பிரியங்கா அளித்த பேட்டியில், ''உத்தர பிரதேசத்தில் புதிய அரசியலை ஆரம்பிக்கப் போகிறோம். அது இளைஞர்களுக்கான, சகோதர சகோதரிகள் மற்றும் ஏழைகளுக்கான அரசியலாக இருக்கும்'' என்றார்.

பிரியங்காவின் வருகையை முன்னிட்டு உத்தர பிரதேசத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்திருக்கிறது. விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு மூன்று தலைவர்களும் செல்லவுள்ளனர்.

வழி நெடுகில் அமைந்துள்ள மகாத்மா காந்தி, பி.ஆர். அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களுக்கு பிரியங்கா காந்தியும், ராகுலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். கட்சி அலுவலகத்திற்கு சென்ற பின்னர் பிரியங்கா காந்தி செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். தேர்தல் வரவிருக்கும் நிலையில் கட்சி அலுவலகத்தில் புதிதாக ஊடக மையம் திறக்கப்பட்டுள்ளது.  தலைவர்கள் செல்லும் பாதை முழுவதும் கொடிகளாலும், பதாகைகளாலும் காங்கிரஸ் கட்சியினர் அலங்கரித்துள்ளனர்.  லக்னோ பயணத்தை முடித்துக் கொண்டு பிரியங்கா காந்தி கிழக்கு உத்தர பிரதேச பகுதிக்கு செல்வார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


Next Story