சவுபாக்கியா திட்டத்தின் கீழ் 100 சதவீத குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது -பிரதர் மோடி


சவுபாக்கியா திட்டத்தின் கீழ் 100 சதவீத குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது -பிரதர் மோடி
x
தினத்தந்தி 11 Feb 2019 11:07 AM GMT (Updated: 11 Feb 2019 11:07 AM GMT)

அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் என்ற சவுபாக்கியா திட்டத்தின் கீழ் 100 சதவீத குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

பெட்ரோலியம், எரிவாயு தொடர்பாக 3 நாள் நடைபெறும் பெட்ரோடெக்-2019 மாநாட்டை பிரதமர் மோடி டெல்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவில் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் 70 நாடுகளை சேர்ந்த 7000 பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.

இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:-

அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் என்ற சவுபாக்கியா திட்டத்தின் கீழ் 100 சதவீத குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

எரிசக்தி நீதியை நிலைநாட்ட மத்திய அரசு பல்வேறு கொள்கைகளை வகுத்து செயல்படுத்தியிருக்கிறது. அதன் மூலமே அனைத்து ஊரகப் பகுதிகளுக்கும் மின்சார வசதி சென்று சேர்ந்திருக்கிறது.

எல்பிஜி இணைப்புகளின் அளவு 5 ஆண்டுகளுக்கு முன்னர் 55 சதவீதமாக இருந்தநிலையில், தற்போது 90 சதவீதத்தை கடந்து உள்ளது. நாட்டில் நீலப் பிழம்பு புரட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பருவநிலை மாற்றத்தை சமாளிக்க நாடுகள் ஒன்றினைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. 2040ஆம் ஆண்டுவாக்கில் நாட்டின் எரிசக்தித் தேவை இருமடங்காகும். அத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு சாதகமான சந்தையாக இந்தியா இருக்கும்.

இந்தியா அண்மையில் 6-வது மிகப்பெரிய பொருளாதார மையமாக உயர்ந்துள்ளது. வரும் 2030ஆம் ஆண்டுவாக்கில் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார மையமாக இந்தியா உருவெடுக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Next Story