உ.பி.யில் 100-க்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிழப்பு விசாரணைக்கு அரசு உத்தரவு


உ.பி.யில் 100-க்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிழப்பு விசாரணைக்கு அரசு உத்தரவு
x
தினத்தந்தி 11 Feb 2019 1:50 PM GMT (Updated: 11 Feb 2019 1:50 PM GMT)

உத்தரபிரதேசத்தில் கோசாலையில் 100-க்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிழந்தது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் பசுக்களுக்காக சிறப்பு நடவடிக்கையை யோகி ஆதித்யநாத் அரசு மேற்கொண்டு வருகிறது. கோசாலைகள் அமைப்பு, பசுக்களுக்கு தீவனம் மற்றும் பராமரிப்பு பணிகளில் அதிக முக்கியத்தும் கொடுத்து நிர்வாகம் செய்கிறது.  2019-20-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டில் மாநிலத்தில் கோசாலைகளை பராமரிக்க ரூ. 647 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் பசு பாதுகாப்பு மையங்களை பராமரிக்க ரூ.247. 60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நகர்புற பகுதிகளில் பசு பாதுகாப்பு மையங்களை சுத்தமாக பராமரிக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிராமங்களில் கோசாலைகள் ஏற்படுத்தப்பட்டு அங்கு ஏராளமான பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

முசாபர்நகர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 100-க்கும்  அதிகமான பசுக்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பசுக்கள் விஷம் பட்ட புற்களை  உண்டோ அல்லது சுகாதாரமற்ற தண்ணீரை அருந்தியதாலோ உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இவ்விவகாரம்  தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வருவாய்த்துறை அதிகாரிகள் குழுவும் அவர்களுடன் கால்நடை மருத்துவர்களும் சம்பவம் நடந்த பகுதிகளுக்கு சென்று பசுக்கள் உயிரிழந்த காரணத்தை அறிய விசாரணையை மேற்கொள்கிறார்கள்.

கடந்த வாரம் ஷாமிலி மாவட்டத்தில் தற்காலிக கோசாலையில் குளிர் காரணமாக 9 பசுக்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியது.

Next Story