டுவிட்டரில் பிரியங்கா காந்தி - 1 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்


டுவிட்டரில் பிரியங்கா காந்தி - 1 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்
x
தினத்தந்தி 11 Feb 2019 5:49 PM GMT (Updated: 11 Feb 2019 5:49 PM GMT)

டுவிட்டரில் இணைந்துள்ள பிரியங்கா காந்தியை, 1 லட்சம் பேருக்கு மேல் பின் தொடர்கிறார்கள்.

புதுடெல்லி, 

காங்கிரஸ் பொது செயலாளராக பொறுப்பேற்ற பிரியங்கா காந்தி இன்று முதன் முறையாக டுவிட்டர் இணையதளத்தில் இணைந்தார். பிரியங்கா காந்தி டுவிட்டரில் இணைந்த 10 மணி நேரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் அவரை பின் தொடர்கின்றனர்.

கடந்த ஜனவரி 23-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும், கிழக்கு உத்தர பிரதேசத்தின் பொறுப்பாளராகவும் பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். தீவிர அரசியலில் இறங்கியுள்ள பிரியங்கா காந்தி, இன்று "மிஷன் உத்தர பிரதேசம்"  பிரசாரம் மூலம் நான்கு நாட்கள் உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் முகாமிட்டு அங்குள்ள முக்கிய தலைவர்களையும், மக்களையும் சந்தித்து வருகிறார். 

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஒன்றான டுவிட்டரில் இன்று இணைந்தார். கடந்த 10 மணி நேரத்தில் மட்டும் பிரியங்கா காந்தியை பின்தொடர்வோர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது. மேலும் அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் கூறுகையில், “தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டுவிட்டரில் இணைந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அவரை பின் தொடர்ந்தனர். தற்போது அந்த வகையில் பிரியங்கா காந்தியும் சாதனை படைத்து உள்ளார். பிரியங்கா காந்தி தற்போது புதிய சூப்பர் ஸ்டாராக உருவெடுத்து வருகிறார்” என்று புகழாரம் சூட்டினார்.


Next Story