சபரிமலை கோவிலில் இன்று நடை திறப்பு : பாதுகாப்புக்கு 3 ஆயிரம் போலீசார் குவிப்பு


சபரிமலை கோவிலில் இன்று நடை திறப்பு : பாதுகாப்புக்கு 3 ஆயிரம் போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 12 Feb 2019 5:37 AM GMT (Updated: 12 Feb 2019 5:37 AM GMT)

மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது. பாதுகாப்புக்கு 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகளும், பா.ஜனதா போன்ற எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தின. 

இந்த சூழலில் துலாம் மாத பூஜைக்காக அக்டோபர் மாதம் 5 நாட்கள் சபரிமலையில் நடை திறக்கப்பட்டது. அப்போது தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்கள் சிலர் அய்யப்பனை தரிசிக்க முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தியதில் வன்முறை அரங்கேறியது.

சபரிமலையின் முக்கியமான விழா காலத்திலும் அங்கு போராட்டம் மற்றும் வன்முறைகளுக்கு குறைவில்லை. எனவே அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டு இருந்தது. இந்த நாட்களிலும் தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்கள் பலர் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். ஆனால் அவர்கள் இந்து அமைப்பினரின் எதிர்ப்பால் பாதியிலேயே திரும்ப நேர்ந்தது.

எனினும், பிந்து (வயது 42) மற்றும் கனகதுர்கா (44) என்ற 2 பெண்கள் சபரிமலையில் அய்யப்பனை திடீரென அதிகாலையில் தரிசித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. 

மாசி மாத பூஜைக்காக  சபரிமலையில் இன்று மீண்டும் நடை திறக்கப்படுகிறது.  5 நாட்கள் நடை திறக்கப்பட்டு இருக்கும்.

மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி மாலை 5 மணிக்கு கோவில் நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து 17-ந்தேதி வரை சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும். அன்று இரவு 10 மணிக்கு அரிவராசனம் இசைக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும். 

மாசி மாத பூஜையின் போதும் இளம் பெண்பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருவார்கள் என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. சன்னிதானம், பம்பை, நிலக்கல், நடைப்பந்தல் போன்ற பகுதிகளில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Next Story