லக்னோ விமான நிலையத்தில் அகிலேஷ் யாதவ் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் - மாயாவதி காட்டம்


லக்னோ விமான நிலையத்தில் அகிலேஷ் யாதவ் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் - மாயாவதி காட்டம்
x
தினத்தந்தி 12 Feb 2019 5:10 PM GMT (Updated: 12 Feb 2019 5:10 PM GMT)

லக்னோ விமான நிலையத்தில் அகிலேஷ் யாதவ் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

அலகாபாத் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பதவியேற்பு  நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் லக்னோ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதுகுறித்து அகிலேஷ் யாதவ் தனது டுவிட்டரில், “அலகாபாத் பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவர் பதவியேற்பு விழாவைக்கண்டு அரசு அச்சப்படுகிறது. இதன் காரணமாகவே, என்னை அலகாபாத் செல்ல விடாமல் தடுக்கும் முயற்சி நடைபெற்றுள்ளது” என்று குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் உ.பி. முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி, “பிரயாக்ராஜில் நுழைய அகிலேஷ் யாதவுக்கு தடை விதித்தது கண்டனத்துக்குரியது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணி பா.ஜனதாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே தான் அவர்கள் அரசியல் ரீதியிலான நிகழ்ச்சிகளுக்கு இதுபோன்று தடை விதிக்கின்றனர். கும்பமேளாவை தங்களின் அரசியல் நோக்கங்களுக்காக பா.ஜனதா பயன்படுத்துகிறது. அகிலேஷ் பிரயாக்ராஜில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது, அதை நிரூபிக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறுகையில், “அராஜக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை சமாஜ்வாதி கட்சி நிறுத்திக்கொள்ள வேண்டும். மாணவர் அமைப்புகளிடையே மோதல் ஏற்பட்டு சட்ட, ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்ற காரணத்தால் தான் அகிலேஷ் யாதவ் வரவேண்டாம் என அலகாபாத் பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்டது. எனவே தான் அதுபோன்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று தெரிவித்தார்.

Next Story