ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு கூறிய அனைத்தும் பொய் என்பது நிரூபணம் -காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி


ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு கூறிய அனைத்தும் பொய் என்பது நிரூபணம் -காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி
x
தினத்தந்தி 13 Feb 2019 1:15 PM GMT (Updated: 13 Feb 2019 1:15 PM GMT)

ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு கூறிய அனைத்தும் பொய் என்பது நிரூபணமாகி உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறி உள்ளார்.

புதுடெல்லி

காங்கிரஸ் தலைவர் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அனில் அம்பானிக்காக மட்டுமே ரபேல் ஒப்பந்தத்தில் திருத்தங்கள்  செய்யப்பட்டுள்ளன. ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு கூறிய அனைத்தும் பொய் என்பது நிரூபணமாகி உள்ளது.

`காங்கிரஸ் அரசு செய்த இந்த ரபேல் ஒப்பந்தத்தை பாஜகவினர் ஏன் மீண்டும் செய்தார்கள் தெரியுமா, இரண்டு காரணங்கள்தான். ஒன்று விலை. இன்னொன்று, உடனடி டெலிவரி. ஆனால் இது இரண்டும் பாஜக செய்த ஒப்பந்தம் மூலம் நடக்கவில்லை. காங்கிரஸ் செய்த ஒப்பந்தத்தை விட மிக தாமதமாகத்தான் ரபேல் விமானம் பாஜக செய்த ஒப்பந்தம் மூலம் கிடைக்கும்.

பாஜக ஒப்பந்தம் மூலம் 10 வருடம் கழித்துதான் இந்தியாவிற்கு விமானம் கிடைக்கும். பிரான்ஸ் அரசு கொடுத்த இறுதி விலையை பாருங்கள். 55 சதவீத  விலையை பிரான்ஸ் ஏற்றி இருக்கிறது. அதேபோல் நாட்கள் செல்ல செல்ல இந்த விலையை ஏற்றுவோம் என்று ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.

இப்போது சொல்கிறேன் இந்த ஒப்பந்தம் ஏன் செய்யப்பட்டது என்று. இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு இரண்டு காரணம் இல்லை, ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தை பிரதமர் மோடி, அனில் அம்பானிக்கு கொடுக்க விரும்பினார். அதனால் நாங்கள் போட்ட ஒப்பந்தத்தை மாற்றிவிட்டு புதிய ஒப்பந்தத்தை போட்டு இருக்கிறார்கள்.

முக்கிய ஆவணங்களை பாஜக சுப்ரீம் கோர்ட்டில் வழங்கவில்லை. நான் தேசிய பாதுகாப்பு குறித்து இங்கு பேசுகிறேன். நான் இங்கே வைத்திருக்கும் கடிதங்களை ஏன் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்கவில்லை. இதில் இருந்து தெரிகிறது பாஜக மிக மிக மோசமாக ஏமாற்றி இருக்கிறது என்று.

இதன் மூலம் பாஜக பொய் சொல்கிறது என்று புரிகிறது.  நரேந்திர மோடி, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் எல்லோரும் நாடாளுமன்றத்தில் பொய் சொன்னது தெளிவாகிறது. சிஏஜி அறிக்கையில் முக்கிய விவரங்கள் எதுவும் இல்லை .சிஏஜி அறிக்கை வெற்று காகிதம் போல உள்ளது என்று கூறினார்.

Next Story