நடிகர்களே அசரும் வகையில் ராகுல் காந்தி நடிக்கிறார் - நாடாளுமன்ற கடைசி கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு


நடிகர்களே அசரும் வகையில் ராகுல் காந்தி நடிக்கிறார் - நாடாளுமன்ற கடைசி கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 14 Feb 2019 12:00 AM GMT (Updated: 13 Feb 2019 9:46 PM GMT)

கட்டிப்பிடிப்பது, கண் சிமிட்டுவது என நடிகர்களே அசரும் வகையில் ராகுல் காந்தி நடிக்கிறார் என்று நாடாளுமன்ற கடைசி கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று முடிவடைந்தது. தேதி குறிப்பிடப்படாமல் கூட்டத்தொடர் தள்ளி வைக்கப்பட்டது.

முன்னதாக, கடைசி நாள் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல், அவரை கிண்டல் செய்து பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது:-

நாடாளுமன்றத்தில் பூகம்பம் வெடிக்கும் என்று ஒருவர் பேசியதை நாம் கேட்டோம். 5 ஆண்டு ஆட்சி முடிவடைய போகிறது. ஆனால், பூகம்பம் வரவே இல்லை.

அவர்கள் விமானத்தை பறக்க விட முயன்றார்கள். ஆனால், நமது வலிமையான ஜனநாயகமும், சபையின் கண்ணியமும் அதை அனுமதிக்கவில்லை.

இந்த சபையின் முதல் தடவை உறுப்பினர் என்ற முறையில், புதிய விஷயங்களை இங்கு நான் பார்த்தேன். கட்டிப்பிடி அரசியலை பற்றி தெரிந்துகொண்டேன். ஒருவரை கட்டிப்பிடிப்பதற்கும், அவமதிப்பதற்கும் உள்ள வேறுபாட்டை முதல் முறையாக உணர்ந்தேன். கண்கள் வழியாகவே அந்த அவமரியாதை வெளிப்படுத்தப்பட்டது. இந்த விளையாட்டு, இச்சபையில் பார்க்கப்பட்டது.

மேலும், ஜனாதிபதி உரை மீதான விவாதத்துக்கு நான் பதில் அளித்தபோது, பலத்த சிரிப்பொலியையும் கேட்டேன். பெரும்பாலான நடிகர்கள் கூட அத்தகைய நடிப்பை நடிக்க முடியாது. கேளிக்கை உலகமே இந்த நடிப்பை கற்றுக்கொள்ளலாம்.

இந்தியாவுக்கு உலக அரங்கில் மரியாதை அதிகரித்துள்ளது. அதற்கு காரணம், பெரும்பான்மை கொண்ட அரசு அமைந்திருப்பதுதான். 30 ஆண்டுகளுக்கு பிறகு, பெரும்பான்மை கொண்ட அரசு அமைந்துள்ளது.

பெரும்பான்மை இல்லாத அரசு அமைந்தபோதெல்லாம் இந்தியாவுக்கு உலக அரங்கில் பாதிப்பே ஏற்பட்டது. பெரும்பான்மை கொண்ட அரசின் தலைவராக வெளிநாடுகளுக்கு செல்லும்போது, அங்கு கிடைக்கும் மரியாதையே தனியாக உள்ளது.

இந்த மரியாதைக்கு நானோ, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜோ காரணம் அல்ல. பெரும்பான்மை ஆதரவு அளித்த நாட்டு மக்களுக்குத்தான் இந்த பெருமை சேரும்.

ஆகவே, வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் பெரும்பான்மை கொண்ட அரசையே தேர்ந்தெடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

உலக அளவில் 6-வது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை நோக்கி நாடு விரைந்து கொண்டிருக்கிறது.

இந்த 16-வது மக்களவையில் மொத்தம் 17 கூட்டத்தொடர்கள் நடந்தன. அவற்றில் 8 தொடர்கள், 100 சதவீதம் ஆக்கப்பூர்வமாக நடந்தன. 219 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டதில், 203 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

சபையை நடத்தியதில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனின் தலைமைப்பண்பு பாராட்டுக்கு உரியது. மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விவாதங்களில் சிறப்பாக பங்கேற்றார். அவர் என்ன பேசி இருக்கிறார் என்பதை வைத்தே எனது உரைகளை தயாரிப்பேன்.

நான் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று வாழ்த்திய முலாயம்சிங் யாதவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


Next Story