பங்களா வீட்டில் தங்க பிஸ்கெட்டுகள் திருடிய மகன்; தந்தை தற்கொலை


பங்களா வீட்டில் தங்க பிஸ்கெட்டுகள் திருடிய மகன்; தந்தை தற்கொலை
x
தினத்தந்தி 15 Feb 2019 9:46 AM GMT (Updated: 15 Feb 2019 9:46 AM GMT)

பங்களா வீட்டுக்கு தன்னுடன் வேலைக்கு வந்த மகன் தங்க பிஸ்கெட்டுகள் திருடியது அறிந்து தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

நாசிக்,

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநகராட்சி உறுப்பினராக இருப்பவர் ஹேமலதா பாட்டீல்.  இவரது மாமனார் சிவாஜி ராவ் பாட்டீல்.  கட்டிட கலைஞரான இவரது பங்களா திலக்வாடி பகுதியில் அமைந்துள்ளது.

இவரது வீட்டில் ஸ்ரீபத் துக்காராம் மாஸ்கே (வயது 52) என்பவர் வேலை செய்து வந்துள்ளார்.  இவர் தன்னுடன் தனது மகனையும் வேலைக்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்த நிலையில், அந்த பங்களாவில் இருந்து தலா 10 தோலாக்கள் கொண்ட 5 தங்க பிஸ்கெட்டுகள் (மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்பு) மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் கடந்த மாதத்தில் திருடப்பட்டு உள்ளது.  இதனை சிவாஜிராவ் குடும்பத்தினர் இரு நாட்களுக்கு முன் கண்டறிந்து உள்ளனர்.

இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.  இதில் துக்காராமின் மகன் மற்றும் பொற்கொல்லர் உள்ளிட்ட 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருந்தது தெரிய வந்தது.

துக்காராமின் மகன் 2 தங்க பிஸ்கெட்டுகளை விற்று ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கியுள்ளான்.  அதன் சீட்டுக்கு கீழ் 3 தங்க பிஸ்கெட்டுகளை மறைத்து வைத்து உள்ளான்.  அவனிடம் இருந்து ரூ.1.70 லட்சம் பணம் மற்றும் 28 தோலாக்கள் தங்கம் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்துள்ளளனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த துக்காராம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.  துக்காராமின் மகனை போலீசார் கண்காணிப்பு இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Next Story