தேசிய செய்திகள்

காஷ்மீர் தாக்குதலால் 40 வீரர்கள் பலிக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் பிரதமர் மோடி ஆவேசம் + "||" + Kashmir attack 40 soldiers killed To terrorists Give us a favorable response Prime Minister Narendra Modi

காஷ்மீர் தாக்குதலால் 40 வீரர்கள் பலிக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் பிரதமர் மோடி ஆவேசம்

காஷ்மீர் தாக்குதலால் 40 வீரர்கள் பலிக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் பிரதமர் மோடி ஆவேசம்
காஷ்மீரில் 40 வீரர்கள் பலிக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி ஆவேசத்துடன் கூறினார்.
புதுடெல்லி, 

இந்தியாவில் பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது.

அந்த வகையில் நேற்று முன்தினம், காஷ்மீரில் புலவாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்கச்செய்து கொடிய தாக்குதல் நடத்தினர். நாட்டையே உலுக்கி உள்ள இந்த தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ராணுவ துறைக்கான மத்திய மந்திரிகள் குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து உத்தரபிரதேசத்தின் வாரணாசி நகருக்கு நாட்டின் அதிவேக ரெயில் சேவையை வழங்கும் ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி பச்சைக்கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையொட்டி டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அவர் புலவாமா தாக்குதல் பற்றி ஆவேசமாக பேசினார். அவர் கூறியதாவது:-

முதலில் புலவாமா தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்துள்ள வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்கள் நாட்டுக்காக தங்களது உயிரை இழந்துள்ளனர். இந்த துயரம் மிகுந்த தருணத்தில் அவர் களை இழந்து வாடுகிற குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த தாக்குதலால் நீங்கள் (நாட்டு மக்கள்) மிகுந்த கோபம் கொண்டுள்ளனர் என்பதையும், உங்கள் ரத்தம் கொதிப்பதையும் நான் அறிவேன். இந்த நேரத்தில் அந்த தாக்குதலுக்கு சரியான பதிலடி தர வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளும், உணர்வுகளும் இருப்பது இயல்பான ஒன்று.

நாம் நமது பாதுகாப்பு படைகளுக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்திருக்கிறோம். அவர்களது வீரத்தின்மீது நாம் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளோம்.

இந்த தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததுடன், உதவிக்கரம் நீட்டிய பயங்கரவாத அமைப்புகள், மிகப்பெரிய தவறை செய்து விட்டன. அவர்கள் தங்களது பயங்கரவாத செயல்களுக்கு மிகக் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியது வரும்.

இந்த தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள், தாக்குதலை நடத்திய சதிகாரர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற உறுதியை நான் நாட்டுக்கு தருகிறேன்.

நான் நமது நண்பர்களுக்கு சொல்லிக்கொள்வேன். இது மிகவும் உணர்வுமயமான ஒரு சூழல். பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது. நாம் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து நின்று, ஒரே குரலில் பேச வேண்டும். நாம் ஒரே நாடு, பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் அனைவரும் ஒரே குரலில் பேசுகிறோம், அந்தப் போராட்டத்தில் நாம் வெற்றி பெறப்போகிறோம் என்ற செய்தி, உலகமெங்கும் போய்ச்சேர வேண்டும்.

நமது அண்டை நாடு (பாகிஸ்தான்), உலக சமுதாயத்தினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நாம் நினைத்தால் நமது கொடூரமான செயல்களால், இந்தியாவை சீர்குலைத்து விடலாம் என்ற மாயையில் அந்த நாடு உள்ளது. அந்த அண்டை நாடு, பொருளாதார ரீதியில் விரக்தியில் உள்ளது. அவர்களின் முயற்சி தோல்வி அடையும், தோற்கடிக்கப்பட்டு விடும் என்பதை அவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

அத்தகைய பாதைகளில் பயணிப்பவர்கள், அவர்களாலேயே அவர்கள் அழிந்து போவார்கள் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய நடவடிக்கை மற்றும் தாக்குதலுக்கு 130 கோடி இந்தியர்களும் சரியான பதிலடி கொடுப்பார்கள்.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பல நாடுகள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளன. அவர்கள் இந்தியாவின் பின்னால் நிற்கிறார்கள். இந்தியாவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நாடுகளுக்கெல்லாம் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரில் கரம் கோர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுக்கிறேன். பயங்கரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஓரணியில் ஒன்றுபட்டு நின்றால்தான், பயங்கரவாதத்தை ஒடுக்க முடியும்.

புலவாமா தாக்குதலை தொடர்ந்து நாம் மிகுந்த துயரத்திலும், கோபத்திலும் இருக்கிறோம். அத்தகைய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம். இந்தியா மிரட்டலுக்கு அடிபணிந்து விடாது. நமது துணிச்சல்மிக்க வீரர்கள் தங்களது உயிர்களை இழந்திருக்கிறார்கள். அவர்கள் இரண்டு கனவுகளை கொண்டிருந்தார்கள். ஒன்று, நாட்டின் பாதுகாப்பு மற்றொன்று, நாட்டின் வளம். அவர்கள் நாட்டுக்காக கண்ட கனவு நிறைவேற எந்த ஒரு வாய்ப்பையும் விட்டு விட மாட்டோம் என்ற உறுதியை நாட்டுக்கு அளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

காஷ்மீர் தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அவர்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ. உதவிக்கரம் நீட்டி இருப்பதையே இது காட்டுகிறது என தகவல்கள் கூறுகின்றன.