புல்வாமா பயங்கரவாத தாக்குதல்: இந்தியாவுக்கு ஆதரவாக இருப்போம் - அமெரிக்கா


புல்வாமா பயங்கரவாத தாக்குதல்: இந்தியாவுக்கு ஆதரவாக இருப்போம் - அமெரிக்கா
x
தினத்தந்தி 16 Feb 2019 7:00 PM GMT (Updated: 16 Feb 2019 6:44 PM GMT)

புல்வாமா பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில், இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது.

புதுடெல்லி,

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிப்பதாக அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றதை தொடர்ந்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் தொலைபேசியில் பேசினார். பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்தார்.

அப்போது அவர் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் தற்காப்பு உரிமைக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், இந்த தாக்குதலை நடத்தியவர்களையும், அதன் பின்னணியில் இருந்தவர்களையும் நீதித்துறையின் கீழ் கொண்டுவர தேவையான உதவிகள் அனைத்தையும் வழங்குவதாகவும் தெரிவித்ததாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

வாஷிங்டனில் ஜான் போல்டன் கூறியதாவது:-

அஜித் தோவலுடன் 2 முறை தொலைபேசியில் பேசினேன். இந்தியாவின் தற்காப்பு உரிமைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்தேன். பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்காவின் இரங்கலையும் தெரிவித்தேன்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஆதரிப்பதையும், அவர்களுக்கு புகலிடம் கொடுப்பதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. இதுதொடர்பாக பாகிஸ்தானிடமும் தொடர்ந்து பேசிவருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க அரசு (வெள்ளை மாளிகை), “இந்த கொடூரமான தாக்குதலை அமெரிக்கா கண்டிக்கிறது. சர்வதேச பாதுகாப்புக்கு மிரட்டல் விடுக்கும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் கொடுப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளது.

அமெரிக்க உள்துறை மந்திரி மைக் பாம்பியோ, “இந்திய பாதுகாப்பு படைகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா கண்டிக்கிறது. உயிரிழந்தவர்களுக்காகவும், அவர்களது குடும்பத்தினருக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்” என்று டுவிட்டரில் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் 15 செனட் சபை உறுப்பினர்கள் உள்பட 70-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். செனட் சபை உறுப்பினர் தோம் தில்லிஸ், “இந்திய துணை ராணுவ போலீசார் மீதான பயங்கரவாத தாக்குதல் வன்முறையின் வெறுக்கத்தக்க செயல். இது இந்தியர்களின் உறுதியை பலவீனப்படுத்தாது என்பது எனக்கு தெரியும். அமெரிக்காவும், அமெரிக்க மக்களும் இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.



Next Story