பாகிஸ்தானுக்கு நிதி கிடைப்பதை தடுக்க இந்தியா நடவடிக்கை


பாகிஸ்தானுக்கு நிதி கிடைப்பதை தடுக்க இந்தியா நடவடிக்கை
x
தினத்தந்தி 17 Feb 2019 2:19 PM GMT (Updated: 17 Feb 2019 2:19 PM GMT)

பாகிஸ்தானுக்கு நிதி கிடைப்பதை தடுக்க இந்தியா நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

புதுடெல்லி, 

புல்வாமா தாக்குதலை அடுத்து சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு பதிலடியை கொடுக்கும் பணியை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ‘வர்த்தக ரீதியில் ஆதரவான நாடு’ என பாகிஸ்தானுக்கு அளித்திருந்த சலுகையை மத்திய அரசு பறித்தது. அதன்படி பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை மற்றும் கூடுதல் வரி உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய வர்த்தக அமைச்சகம் மேற்கொள்ள உள்ளது.

 இதற்காக எந்தெந்த பொருட்களுக்கு தடை, எந்த பொருட்களுக்கு சுங்க வரி அதிகரிப்பு மற்றும் எந்தெந்த பொருட்களுக்கு துறைமுக கட்டுப்பாடு விதிப்பது போன்ற பட்டியலை வர்த்தக அமைச்சகம் தயாரித்து வருகிறது. இந்தியா–பாகிஸ்தான் இடையே ஆண்டுக்கு 2 பில்லியன் டாலர் (சுமார் ரூ.14 ஆயிரம் கோடி) அளவுக்கு வர்த்தகம் நடைபெறுவதாக ஐ.நா. கணக்கிட்டு இருந்தது. அதேநேரம் இரு நாடுகளுக்கு இடையே 4.7 பில்லியன் டாலர் அளவுக்கு முறைசாரா வர்த்தகம் நடப்பதாக வணிக வல்லுனர்கள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக வர்த்தக முடக்கத்தை இந்தியா மேற்கொள்வதன் மூலம் அந்த நாட்டு பொருளாதாரம் சரிவடையும் என கூறப்படுகிறது. ஏற்கனவே சரிவில் இருக்கும் தங்கள் நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்த இம்ரான்கான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தியாவின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானுக்கு பேரிடியாக அமையும் என வர்த்தக நோக்கர்கள் கூறியுள்ளனர். ‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்த்தப்பட்டுள்ளது. 

காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்–இ–முகமது இயக்கம் பொறுப்பேற்றது. இந்த இயக்கத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை பல்வேறு உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், அந்த அமைப்பின் சொத்துக்களை முடக்குமாறு அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது. தற்போது நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிற பாகிஸ்தானின் நிலையை தரம் இறக்கி, சர்வதேச அமைப்புகளிடம் இருந்து அந்த நாட்டுக்கு மேலும் நிதி உதவி கிடைத்திடாத படிக்கு இந்தியா அதிரடி நடவடிக்கையில் இறங்குகிறது.

குறிப்பாக காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய கார் குண்டு வெடிப்பில், பாகிஸ்தான் அரசு அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கிறது என கூறி ஒரு ஆவணத்துடன் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இயங்கி வருகிற எப்.ஏ.டி.எப். என்னும் நிதி நடவடிக்கை பணிக்குழுவை இந்தியா நாடுகிறது. இந்த அமைப்பு, இந்தியாவின் ஆவணத்தில் திருப்தி கொள்கிற பட்சத்தில், சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்., மற்றும் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகியவை பாகிஸ்தானை தரம் இறக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படி தரம் இறக்குகிறபோது, அந்த அமைப்புகளிடம் இருந்து பாகிஸ்தானுக்கு நிதி உதவி கிடைக்காது.
 

Next Story