வன்முறை சம்பவத்தை கண்டித்து காஷ்மீரில் முழு அடைப்பு; இயல்பு வாழ்க்கை முடக்கம்


வன்முறை சம்பவத்தை கண்டித்து காஷ்மீரில் முழு அடைப்பு; இயல்பு வாழ்க்கை முடக்கம்
x
தினத்தந்தி 17 Feb 2019 10:30 PM GMT (Updated: 17 Feb 2019 9:04 PM GMT)

வன்முறை சம்பவத்தை கண்டித்து காஷ்மீரில் நடைபெற்ற முழு அடைப்பு காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியது.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் ஜம்மு பிராந்தியத்தில் நடைபெறும் வன்முறைகளை கண்டித்து ஸ்ரீநகர் உள்ளிட்ட பள்ளத்தாக்கு பகுதிகளில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் (மத்திய ரிசர்வ் படையினர்) மீது கடந்த 14-ந்தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து மாநிலத்தில் ஆங்காங்கே கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.

குறிப்பாக ஜம்மு பிராந்தியத்தில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதலில் ஏராளமான காஷ்மீரிகளின் உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதைப்போல மாநிலத்துக்கு வெளியேயும் மாணவர்கள் உள்ளிட்ட காஷ்மீரிகள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த வன்முறை சம்பவங்களை கண்டித்து காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு காஷ்மீர் பொருளாதார கூட்டணி மற்றும் காஷ்மீர் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு வர்த்தக அமைப்புகள் ஆதரவு அளித்தன.

மாநிலத்தின் கோடை கால தலைநகரான ஸ்ரீநகர் உள்ளிட்ட பள்ளத்தாக்கு பகுதி முழுவதும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. அரசு பேருந்துகள் மற்றும் கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் இயங்கவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஜம்மு வன்முறைகளை கண்டித்து பல இடங்களில் வணிகர்கள் பேரணி நடத்தினர். இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தால் ஜம்மு பிராந்தியத்துடன் வர்த்தக உறவுகளை துண்டிப்போம் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட ஜம்மு பிராந்தியத்தில் நேற்று 3-வது நாளாக ஊரடங்கு அமலில் இருந்தது. அங்கு அமைதியை ஏற்படுத்த ராணுவம் பல இடங்களில் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். மேலும் முக்கிய பிரமுகர்களுடன் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை நிலை நாட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அங்கு நேற்றுமுன்தினம் இரவு முதல் எந்த வன்முறை சம்பவங்களும் நடைபெறவில்லை என போலீசார் தெரிவித்தனர். எனினும் ஜம்மு பிராந்தியம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. தொடர் ஊரடங்கு நடவடிக்கையால் இங்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. சுமார் 20-க்கும் மேற்பட்ட திருமணங்கள் தள்ளி போடப்பட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story