புதுச்சேரி விவகாரம்: கிரண்பெடி - நாராயணசாமி இடையே இன்று மாலை பேச்சுவார்த்தை


புதுச்சேரி விவகாரம்: கிரண்பெடி - நாராயணசாமி இடையே இன்று மாலை பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 18 Feb 2019 7:23 AM GMT (Updated: 18 Feb 2019 7:23 AM GMT)

புதுச்சேரி விவகாரம் தொடர்பாக கிரண்பெடி- நாராயணசாமி இடையே இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடிக்கு எதிராகவும், மக்கள் நலத்திட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் கடந்த 13-ந்தேதி முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் தொடங்கினர். இதை ஆதரித்து தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் போராட்டத்தில் இறங்கினர். 

கவர்னர் மாளிகையை விட்டு வெளியே செல்ல முடியாத அளவுக்கு கிரண்பெடி சிறைபிடிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டு துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது. அவர்களது பாதுகாப்புடன் மறுநாள் அதாவது 14-ந் தேதி காலை கவர்னர் மாளிகையை விட்டு வெளியேறிய கிரண்பெடி டெல்லி புறப்பட்டுச் சென்றார். மீண்டும் அவர் வருகிற 20-ந் தேதி புதுவைக்கு திரும்புவார் என கவர்னர் மாளிகை வட்டாரம் தெரிவித்தது.

ஆனால் தொடர்ந்து முதல் அமைச்சர் நாராயணசாமியும், அமைச்சர்களும் கவர்னர் மாளிகை முன்பு விடிய விடிய தர்ணா போராட்டம் நடத்திய விவகாரம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்கள் பிரதிநிதிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அதற்கு தீர்வு காண முயற்சிக்காமல் கவர்னர் புறப்பட்டுச் சென்றது கடும் விமர்சனத்துக்குள்ளானது.

இதற்கிடையே புதுவை சபாநாயகர் வைத்திலிங்கம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் புதுவையில் அசாதாரண சூழ்நிலை நிலவும் போது இதை கண்டுகொள்ளாமல் கவர்னர் கிரண்பெடி ஊரை விட்டு வெளியே சென்று விட்டார். எனவே அவருக்கு பதிலாக இடைக்கால கவர்னரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்களும் டெல்லியில் மத்திய உள்துறை மந்திரியை சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினர்.

இன்று 6-வது நாளாக கவர்னர் மாளிகை முன் போராட்டம் நீடித்தது. இந்தநிலையில் டெல்லியில் உள்ள நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு நேற்று காலை கவர்னர் கிரண்பெடி புதுவை திரும்பினார். 

போராட்டம் நடத்தி வரும் முதல்-அமைச்சர், அமைச்சர்களை கவர்னர் சந்தித்து பேச விரும்புவதாகவும் மாலை 6 மணியளவில் நேரம் ஒதுக்கி இருப்பதாகவும் கவர்னரின் சிறப்பு பணி அதிகாரி தேவநீதிதாஸ் கடிதம் அனுப்பினார். இந்த அழைப்பை முதல்-அமைச்சர் நாராயணசாமி ஏற்றுக்கொண்டார். பதிலுக்கு அவரும் கவர்னருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், ‘பேச்சுவார்த்தை தொடர்பான கூட்டத்தை தலைமை செயலகத்தில் நடத்த வேண்டும். அனைத்து அரசு செயலர்களும், உயர் அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும். குறிப்பாக கவர்னரின் சிறப்பு பணி அதிகாரி தேவநீதிதாஸ் இந்த கூட்டத்தில் பங்கேற்கக்கூடாது’ என்று தெரிவித்திருந்தார். 

இதையடுத்து மாலை 5.30 மணி முதல் தலைமைச்செயலர் அஸ்வனி குமார் மற்றும் அரசு செயலாளர்கள் ராஜ்நிவாஸ் வரத்தொடங்கினர். ஆனால், முதல்-அமைச்சர் அனுப்பிய கடிதத்துக்கு கவர்னர் அலுவலகத்தில் இருந்து பதில் வரவில்லை. இதனால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. 

இந்நிலையில் காகங்கள் கொண்ட படத்தை டுவிட்டரில் பதிவிட்ட கிரண்பெடியின் செயலால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 2 காகங்கள் மரக்கிளையில் அமர்ந்திருப்பது போன்ற படத்தை வெளியிட்டுள்ள கிரண்பெடி, தர்ணா செய்வதும் ஒருவகை யோகா தான் என கூறியுள்ளார்.

அத்துடன் ஆளுநர் மாளிகையில் பூனை யோகா செய்வது போன்ற படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ள கிரண்பெடி, யோகா அனைவருக்கும் பொதுவானது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனிடைய கிரண்பெடி நிற அடிப்படையில் விமர்சனம் செய்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கிரண்பெடி இன்று அழைப்பு விடுத்து உள்ளார். ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தை என கூறி உள்ளார்.

இதுகுறித்து  முதலமைச்சர் நாராயணசாமி கூறும் போது "39 கோரிக்கைகள் தொடர்பாக பேச கிரண்பெடி அழைத்துள்ளார். பேச்சுவார்த்தையில் நானும், அமைச்சர்களும் பங்கேற்க முடிவு செய்துள்ளோம். மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது" என கூறினார்.

Next Story