தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் சி.பி.ஐ. விசாரணைக்கு தடை இல்லை - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு


தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் சி.பி.ஐ. விசாரணைக்கு தடை இல்லை - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 18 Feb 2019 10:15 PM GMT (Updated: 18 Feb 2019 8:23 PM GMT)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தடை இல்லை என சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.

புதுடெல்லி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் நடந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக சிப்காட் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் இந்த வழக்குகள் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டன.

இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடக்கோரியும், தூத்துக்குடி கலெக்டர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கதிரேசன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்கவும் உத்தரவிட்டது. அதன்படி சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த ஆண்டு டிசம்பர் 7-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ விசாரணைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். மேலும் இந்த மனு மீது சி.பி.ஐ உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்ஜீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தொடரலாம் எனவும், தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் சி.பி.ஐ. இந்த விசாரணையை நடத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

எனினும் இந்த விவகாரத்தில் காவல்துறையினர் மீது வழக்கு மற்றும் அபராதம் விதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்து இந்த வழக்கை முடித்து வைத்தனர். இதன் மூலம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு தடை நீங்கி உள்ளது.


Next Story