பயங்கரவாதிகள், அவர்களுக்கு உதவி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: இந்தியா-அர்ஜென்டினா கூட்டு அறிக்கை


பயங்கரவாதிகள், அவர்களுக்கு உதவி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: இந்தியா-அர்ஜென்டினா கூட்டு அறிக்கை
x
தினத்தந்தி 18 Feb 2019 11:10 PM GMT (Updated: 18 Feb 2019 11:10 PM GMT)

பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா-அர்ஜென்டினா கூட்டு அறிக்கை வெளியிட்டது.

புதுடெல்லி,

காஷ்மீர் புலவாமா தாக்குதலுக்கு பின்னர் முதலாவது வெளிநாட்டு தலைவராக அர்ஜென்டினா ஜனாதிபதி மவுரிசியோ மாக்ரி இந்தியா வந்துள்ளார். டெல்லியில் அவரும், பிரதமர் நரேந்திர மோடியும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது காஷ்மீர் தாக்குதல் சம்பவம் பற்றியும் இருவரும் பேசினார்கள்.

பின்னர் இரு தலைவர்களும் ‘பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள்’ என்ற சிறப்பு அறிவிப்புகளை கூட்டு அறிக்கையாக வெளியிட்டனர். அதில் கூறியிருப்பதாவது:-

பயங்கரவாதம் உலக அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக எல்லைதாண்டிய பயங்கரவாத நடவடிக்கையை எந்தவகையிலும், எந்த நாட்டின் மீது நடந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது.

அனைத்துவகையான பயங்கரவாதத்தையும், அதன் வெளிப்பாடுகளையும் ஒடுக்க வேண்டும். பயங்கரவாதிகள், பயங்கரவாத அமைப்புகள், அவர்களது தொடர்பு மற்றும் செயல்பாடுகள், அவர்களை ஊக்கப்படுத்துபவர்கள், ஆதரிப்பவர்கள், நிதியுதவி மற்றும் புகலிடம் வழங்குபவர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் புகலிடங்கள் அழிக்கப்பட வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானப்படி இந்தியாவும், அர்ஜென்டினாவும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக போராடவும், இந்த சவாலை சந்திக்கவும் தங்களது நல்லுறவை பலப்படுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story