காஷ்மீரி மாணவர்களை சேர்க்கமாட்டோம் என்ற முடிவை அழுத்தம் காரணமாக எடுத்தோம் - டேராடூன் கல்லூரிகள்


காஷ்மீரி மாணவர்களை சேர்க்கமாட்டோம் என்ற முடிவை அழுத்தம் காரணமாக எடுத்தோம் - டேராடூன் கல்லூரிகள்
x
தினத்தந்தி 19 Feb 2019 12:10 PM GMT (Updated: 19 Feb 2019 1:00 PM GMT)

காஷ்மீரி மாணவர்களை சேர்க்கமாட்டோம் என்ற முடிவை அழுத்தம் காரணமாக எடுத்தோம் என டேராடூன் கல்லூரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புல்வாமா தாக்குதலை அடுத்து இந்தியாவின் பிற பகுதிகளில் காஷ்மீரிகளுக்கு எதிராக கோபமான போக்கு காணப்பட்டது. காஷ்மீரி மாணவர்களில் சிலர் தாக்குதலை பாராட்டி கருத்து வெளியிட்டது நிலையை மோசமாக்கியது. இதனையடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது என்பது கல்லூரி நிர்வாகங்களுக்கு மிகவும் முக்கிய சிரமமான பணியாகியது. இந்நிலையில் டேராடூனில் உள்ள இரு கல்லூரிகள், இனி காஷ்மீரி மாணவர்களை கல்லூரியில் சேர்க்கமாட்டோம் என அறிவித்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்பாவி காஷ்மீர் மாணவர்களை தண்டிப்பது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கிடையே மோசமான சூழ்நிலை காரணமாக காஷ்மீரி மாணவர்கள் சொந்த மாநிலங்களை நோக்கி திரும்பினர். 

காஷ்மீரில் இருந்து வரும் மாணவர்களை இனிவரும் கல்வி ஆண்டில் கல்லூரியில் சேர்க்கமாட்டோம் என்பது தொடர்பாக இரு கல்லூரிகள் விளக்கம் அளித்துள்ளன. நாங்கள் அழுத்தம் காரணமாகவே இதுபோன்ற முடிவை எடுத்தோமே தவிர, நிர்வாகம் தரப்பில் கொள்கை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. “கல்லூரியின் வாயில் முன்னதாக கூடிய 400-500 பேர் காஷ்மீரி மாணவர்களை வெளியேற்ற வேண்டும், இனி காஷ்மீரி மாணவர்களை சேர்க்க கூடாது என உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுபோன்ற அழுத்தமான நிலையிலே நாங்கள் அப்படியொரு அறிவிப்பை வெளியிட நேரிட்டது,” என அல்பின் காலேஜ் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் டெக்னாலஜி  கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
காஷ்மீரி மாணவர்கள் வரும் கல்வியாண்டு முதல் சேர்க்கப்பட மாட்டார்கள் என்பது தொடர்பாக கொள்கையளவில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார். போராட்ட கூட்டத்தை கலைக்கவே அதுபோன்ற அறிவிப்பு வெளியிட்டது என்றார். இதேபோன்று பாபா ஃபரிட் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியும் போராட்டம் காரணமான நெருக்கடியில் காஷ்மீரி மாணவர்களை பாதுகாக்க வேண்டும் என்று அப்படி அறிவித்தோம் என கூறியுள்ளார். இப்போது அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இரு கல்லூரிகளிலும் 400க்கும் அதிகமான காஷ்மீரி மாணவர்கள் படிக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story