காஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது பற்றிய வலுவான ஆதாரங்கள் உள்ளன - மத்திய மந்திரி தகவல்


காஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது பற்றிய வலுவான ஆதாரங்கள் உள்ளன - மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 19 Feb 2019 10:45 PM GMT (Updated: 20 Feb 2019 7:04 AM GMT)

காஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது பற்றிய வலுவான ஆதாரங்கள் உள்ளன என்று மத்திய மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரத்தோர் கூறினார்.

புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தினர் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதுபற்றி மத்திய தகவல் ஒளிபரப்பு மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரத்தோர் கூறும்போது, “காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது பற்றி பாதுகாப்பு படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினரிடம் வலுவான ஆதாரங்கள் உள்ளன. இது அவர்களுக்கு தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதில் அளித்துள்ளார். அதில் அவர், “இந்தியா நடவடிக்கை எடுப்பதற்குரிய ஆதாரங்களை கொடுத்தால், நிச்சயமாக தாக்குதலை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் பாகிஸ்தான் மீது எந்த வகையிலும் பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்றும் கூறியுள்ளார்.

இம்ரான்கானின் பதில் குறித்து ராஜ்யவர்தன்சிங் ரத்தோரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி கூறியபடி, பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மேற்கொண்டு திட்டமிட்டு நடவடிக்கை எடுப்பார்கள். இந்தியா ஒரு பொறுப்புள்ள நாடு, இந்தியாவுக்கும், இந்திய அரசுக்கும் நாட்டையும், மக்களையும் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும், அதனை செய்யும். பயங்கரவாதத்தை ஆதரிப்பதை விலக்கிக்கொள்ளவில்லை என்றால் பாகிஸ்தானுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது என்பதை இந்தியா தெளிவாக கூறியுள்ளது. ஒருவேளை பேச்சுவார்த்தை நடைபெற்றால், அது பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகத் தான் இருக்கும்.

இந்தியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் பற்றி பாகிஸ்தானுக்கு பலமுறை ஆதாரங்கள் கொடுத்திருக்கிறோம். மும்பை தாக்குதல் குறித்த ஆதாரங்களை கொடுத்துள்ளோம், அதில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்காக இன்னும் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story