கேரளாவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா; 30 லட்சம் பெண்கள் பங்கேற்பு


கேரளாவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா; 30 லட்சம் பெண்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 20 Feb 2019 1:42 PM GMT (Updated: 20 Feb 2019 1:42 PM GMT)

பெண்களின் சபரிமலை எனப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நடந்த பொங்கல் விழாவில் 30 லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் இன்று பொங்கல் திருவிழா நடைபெற்றது.  இதில் மதம், இனம் என எந்த வேற்றுமையும் இன்றி 30 லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு வழிபட்டனர்.  ஒரே நாளில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி உலக சாதனைகளுக்கான கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

ஆண்டுதோறும் மாசி மாதத்தில், நடைபெறும் இந்த விழாவில்  அம்மனுக்கு  பொங்கல் வைத்து பெண்கள் வழிபடுவது வழக்கம். அதன்படி,  இன்று நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் கேரளா மட்டுமின்றி, தமிழகத்திலும் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

இதை தொடர்ந்து, கோவில் அமைந்துள்ள சாலையில் பெண்கள்  பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். முன்னதாக, கோயில் முன்பு வைக்கப்பட்டிருந்த பண்டார அடுப்பு என்ற பெரிய அடுப்பில் தந்திரி பரமேஸ்வரன் வாசுதேவ பட்டாதிரி தீ மூட்டி பொங்கலை தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து செண்டைமேளம் முழங்கப்பட்டது.

இந்த திருவிழாவில் வெளிநாட்டை சேர்ந்த பெண்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Next Story