கான்பூரில் விரைவு ரெயிலில் குண்டுவெடிப்பு; கடிதம் பறிமுதல், தீவிரவாத சதியா என போலீசார் விசாரணை


கான்பூரில் விரைவு ரெயிலில் குண்டுவெடிப்பு; கடிதம் பறிமுதல், தீவிரவாத சதியா என போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 Feb 2019 9:00 AM GMT (Updated: 21 Feb 2019 9:00 AM GMT)

கான்பூரில் விரைவு ரெயிலில் நடந்த குண்டுவெடிப்பில் கிடைத்த கடிதத்தினை அடுத்து தீவிரவாத சதியா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கான்பூர்,

உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் இருந்து அரியானாவில் உள்ள பிவானி நகரை நோக்கி காலிண்டி விரைவு ரெயில் நேற்று சென்று கொண்டிருந்தது.  நேற்றிரவு 7.10 மணியளவில் பராஜ்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த ரெயிலின் பொது பெட்டியில் இருந்த கழிவறையில் திடீரென சிறிய அளவிலான குண்டுவெடிப்பு நடந்தது.

இதுபற்றிய முதற்கட்ட விசாரணையில் வெடிகுண்டுகள் வெடித்து இருக்க கூடும் என தெரிய வந்தது.  இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை.  இதனை அடுத்து தீவிரவாத ஒழிப்பு படையானது விசாரணை மேற்கொண்டது.  அங்கிருந்து கடிதம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.

சம்பவ இடத்தில் இருந்து கிடைத்த கடிதம் போலியானது போல் உள்ளது என்றும் ஆனால் அதில் மிக மிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்யும் ரெயில்கள் மற்றும் பிரதமரின் பொது கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும் என போலீசாருக்கு ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தினர் மிரட்டல் விடும் வகையில் தகவல் உள்ளது என்றும் காவல் துறை வட்டாரம் தெரிவிக்கின்றது.

சம்பவம் நடந்த பகுதிக்கு அருகே சந்தேகத்திற்கு உரிய வகையில் நபரொருவர் அமர்ந்து இருந்துள்ளார் என சிலர் தெரிவித்துள்ளனர்.  இதனை தொடர்ந்து லக்னோ, கான்பூர், பிரயாக்ராஜ் மற்றும் பரேலி ஆகிய நகரங்களில் உள்ள பல்வேறு ரெயில் நிலையங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.  பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Next Story