ராகுல்காந்தி திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடைபயணம்


ராகுல்காந்தி திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடைபயணம்
x
தினத்தந்தி 22 Feb 2019 7:36 AM GMT (Updated: 22 Feb 2019 7:36 AM GMT)

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி திருப்பதியில் இருந்து திருமலைக்கு ராகுல்காந்தி நடந்து செல்கிறார்.

திருப்பதி,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை விமானம் மூலம் ரேணிகுண்டா வருகை தந்தார். அங்கிருந்து திருப்பதி  சென்ற ராகுல்காந்தி,  வெங்கடேசுவரர் கோயிலில் வழிபாடு நடத்துவதற்காக திருமலைக்கு நடந்தே சென்று கொண்டிருக்கிறார். 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்தே ராகுல் காந்தி திருமலைக்கு சென்று கொண்டிருக்கிறார். 4 மணி நேரம் நடந்து சென்று ராகுல்காந்தி ஏழுமலையானை வழிபாடு செய்ய உள்ளார். 

வழி நெடுக ராகுல்காந்தியை பார்த்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். பாதுகாப்பு வளையத்தை மீறி சில இடங்களில் ராகுல்காந்தி பக்தர்களோடு கைகுலுக்கி வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார். ராகுல்காந்தியுடன் ரைஹன் வதேரா (பிரியங்கா காந்தியின் மகன்) உடன் செல்கிறார். இருவரும் நடைபயணமாகவே கோயிலுக்கு சென்று வழிபடுகின்றனர். ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

மதியம் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தாரக ராமா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். கூட்டத்தில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர் பேச உள்ளார். கூட்டம் முடிந்தவுடன் அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.  ராகுல்காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பொறுப்பு ஏற்ற பிறகு ராகுல்காந்தி, திருப்பதி கோவிலுக்கு செல்வது இதுதான் முதல் முறையாகும். 

Next Story