திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராகுல்காந்தி சாமி தரிசனம் - நடைபாதை வழியாக சென்றார்


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராகுல்காந்தி சாமி தரிசனம் - நடைபாதை வழியாக சென்றார்
x
தினத்தந்தி 22 Feb 2019 10:45 PM GMT (Updated: 22 Feb 2019 10:06 PM GMT)

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி நடைபாதை வழியாக நடந்து சென்று சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி,

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று காலை 8.30 மணி அளவில் தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டார். காலை 10.50 மணி அளவில் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்த ராகுல்காந்தி அங்கிருந்து காரில் 11.50 மணி அளவில் திருமலையில் உள்ள அலிபிரிக்கு சென்றார். அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபாதையில் நடந்தே திருமலைக்கு சென்றார்.

பொதுவாக திருமலையில் முதன் முதலில் நடைபாதை படிக்கட்டுகள் வழியாக ஏறி செல்பவர்கள் குறைந்தது 4 மணி நேரம் எடுத்து கொள்வர். ஆனால் ராகுல்காந்தி 1 மணி நேரம் 50 நிமிடத்தில் நடந்து சென்று கோவிலை அடைந்தார் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக சென்று ராகுல்காந்தி ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் பட்டு வஸ்திரங்கள் போர்த்தி ராகுல்காந்திக்கு வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் வேத பண்டிதர்கள் தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்களை வழங்கினர். மேலும் வெங்கடாசலபதியின் உருவப்படத்தையும் அளித்தனர்.

பின்னர் அங்கிருந்து பத்மாவதி தாயார் கோவில் அருகே உள்ள ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தார். மாலை 4.15 மணி அளவில் திருப்பதி தாரகராமராவ் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்றார்.

ராகுல்காந்தி வருகையையொட்டி திருமலை-திருப்பதி சாலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story