தொழில் அதிபர்களின் ரூ.3½ லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்யும்போது விவசாய கடன்களை ரத்து செய்யாதது ஏன்? - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி


தொழில் அதிபர்களின் ரூ.3½ லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்யும்போது விவசாய கடன்களை ரத்து செய்யாதது ஏன்? - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி
x
தினத்தந்தி 23 Feb 2019 12:00 AM GMT (Updated: 22 Feb 2019 11:03 PM GMT)

தொழில் அதிபர்களின் ரூ.3½ லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்யும்போது, விவசாய கடனை ரத்து செய்யாதது ஏன்? என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி விடுத்தார்.

திருப்பதி,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:-

தற்போது பிரதமராக இருப்பவர் (மோடி), ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதாக கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது கூறினார். ஆனால், அவர் தனது வாக்குறுதியை காப்பாற்றவில்லை.

இருப்பினும், வரும் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால், நாங்கள் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்போம். இந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதை ஒரு பொருட்டாக கருதாமல், எங்களது வாக்குறுதியை நிறைவேற்றுவோம். அதை செய்வதில் எந்த சக்தியாலும் எங்களை தடுக்க முடியாது.

பிரதமர் மோடி, பெரும் தொழில் அதிபர்களின் ரூ.3½ லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளார். அப்படிப்பட்டவர், விவசாய கடன்களை ஏன் ரத்து செய்யவில்லை?

மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில், விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்தோம். அதை நிறைவேற்றி காட்டினோம். கடன் தள்ளுபடி செய்ய பணம் எங்கிருந்து வருகிறது என்பதையும் காட்டி உள்ளோம்.

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், பொதுத்துறை நிறுவனத்தை புறக்கணித்து விட்டு, அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடி கிடைப்பதற்கு மோடி ஏற்பாடு செய்துள்ளார். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.


Next Story