பெங்களூருவில் விமான கண்காட்சி நடைபெற்று வரும் விமானப்படை தளத்தில் பயங்கர தீவிபத்து; 300 கார்கள் எரிந்து சாம்பல்


பெங்களூருவில் விமான கண்காட்சி நடைபெற்று வரும் விமானப்படை தளத்தில் பயங்கர தீவிபத்து; 300 கார்கள் எரிந்து சாம்பல்
x
தினத்தந்தி 23 Feb 2019 10:45 PM GMT (Updated: 23 Feb 2019 9:05 PM GMT)

பெங்களூருவில், சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வரும் விமானப்படை தளத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 300 கார்கள் எரிந்து நாசமாயின.

பெங்களூரு,

பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் 5 நாட்கள் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 20-ந்தேதி தொடங்கிய இந்த விமான கண்காட்சி இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது. 4-வது நாளான நேற்று நடந்த விமான கண்காட்சியில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் சாகசத்தில் ஈடுபட்டன. நேற்று விடுமுறை நாள் என்பதால் இந்த கண்காட்சியை கண்டுகளிக்க ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர்.

விமான கண்காட்சியை காண சென்ற பொதுமக்கள் தங்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு தனித்தனியாக விமானப்படை தளத்தில் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. நேற்று மதியம் 12 மணியளவில் விமானப்படை தளத்தின் 5-வது நுழைவாயில் அருகே கார்கள் நிறுத்தப்பட்டு இருக்கும் இடத்தில் திடீரென தீப்பிடித்தது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கார் நிறுத்தும் இடத்தில் இருந்த புற்கள் காய்ந்த நிலையில் இருந்ததோடு, காற்றும் அதிகமாக வீசியதால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததுடன் வேகமாக பரவியது. இதனால் தீயை அணைக்க கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

மொத்தம் 15 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் 2 மணிநேரத்துக்கும் மேலாக போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர்.

இருப்பினும், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 300-க்கும் அதிகமான கார்கள் தீயில் கருகி நாசமாகின. இதில் 270 கார்கள் முற்றிலுமாக எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தன. 30-க்கும் அதிகமான கார்கள் பலத்த சேதம் அடைந்தன.

இந்த தீவிபத்துக்கான சரியான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார், தீயணைப்பு துறை மற்றும் ராணுவத்தினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

விமான கண்காட்சி நடைபெறும் இடத்துக்கும், வாகன நிறுத்தம் இடத்துக்கும் 2½ கிலோ மீட்டர் தூரம் இருக்கும் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தீவிபத்து நடந்த போதிலும் கூட நேற்று மாலையில் வழக்கம் போல் விமான சாகசங்கள் நடந்தன.


Next Story