‘நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளது’ - பிரதமர் மோடி பேச்சு


‘நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளது’ - பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 27 Feb 2019 12:06 AM GMT (Updated: 27 Feb 2019 12:06 AM GMT)

நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஜெய்ப்பூர், 

ராஜஸ்தான் மாநிலம் சுரு என்ற இடத்தில் பா.ஜனதா சார்பில் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:–

இந்திய மக்கள் பாதுகாப்பாக இருக்க நம்முடைய பாதுகாப்பு படையினரே காரணம். நாட்டையும், மக்களையும் எதற்காகவும், யாரிடமும் அடிபணிய விடமாட்டேன். நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளது என்பதை மக்களிடம் உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.

நாட்டை விட மேலானது எதுவும் இல்லை. இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம். பாகிஸ்தான் எல்லையில் புகுந்து பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப்படை வீரர்களுக்கு உங்களின் பிரதான சேவகனான நான் தலை வணங்குகிறேன்.

இந்த மண்ணுக்காக நான் சபதம் ஏற்று உள்ளேன். நாடு வீழ நான் விட மாட்டேன். நாடு செயல்படாமல் நின்று போகவும், வளைந்து போகவும் அனுமதிக்க மாட்டோம். என் தாய் நாட்டுக்கு நான் அளிக்கும் உறுதி இது.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது அவர் அங்கு கூடியிருந்த மக்களிடம் ‘பாரத மாதாவுக்கு ஜே’ என கரகோ‌ஷம் எழுப்புமாறு வேண்டுகோள் விடுத்தார். உடனே அங்கிருந்த மக்களும் ‘பாரத மாதாவுக்கு ஜே’ என விண்ணதிர கோ‌ஷம் எழுப்பினர்.

மன்னிப்பு கேட்ட மோடி

முன்னதாக நேற்று காலை 11 மணி அளவில் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சர்வதேச காந்தி அமைதி விருது வழங்கும் விழா நடைபெற இருந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி வர தாமதமானதால் விழாவும் சற்று நேரம் தாமதமானது.

இதையடுத்து ஜனாதிபதி மாளிகைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்த மக்களிடம், தாமதமாக வந்ததற்காக தன்னை முதலில் அனைவரும் மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர் பேசுகையில், நாட்டின் பாதுகாப்பு குறித்து மந்திரிகள், அதிகாரிகள் இடையேயான முக்கிய கூட்டம் 10 மணிக்கு நடந்தது. இதில் பங்கேற்றதால் என்னால் குறித்த நேரத்தில் இந்த விழாவுக்கு வர முடியாமல் போய் விட்டது. இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.


Next Story