அபிநந்தனின் துணிச்சலுக்கு பாலிவுட் பிரபலங்கள் பாராட்டு
காஷ்மீரில் இந்திய எல்லைப்பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய விமானப்படை விரட்டியடித்தது.
புதுடெல்லி,
இந்திய போர் விமானி அபிநந்தன் இந்த நடவடிக்கையின் போது பாகிஸ்தானில் சிக்கிக்கொண்டார். சென்னையை சேர்ந்த அபிநந்தனின் வீரம் மற்றும் துணிச்சலுக்கு நாடு முழுதும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இதைப்போல அமிதாப்பச்சன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்–நடிகைகள் பலரும் அவரை பாராட்டி இருப்பதுடன், அவரது விடுதலைக்கு பிரார்த்திப்பதாகவும் டுவிட்டர் தளங்களில் தெரிவித்து உள்ளனர்.
அதன்படி நடிகர் ரன்வீர் சிங், ‘துணிச்சல் மிக்க விமானப்படை அதிகாரி அபிநந்தன், இந்தியாவே உங்களுடன் இருக்கிறது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதைப்போல அர்ஜூன் கபூர், ‘எதிர்ப்பிலும் அமைதி காத்து துணிச்சலுடன் நின்ற நமது வீரமிகு போர் விமானி அபிநந்தனுக்காக பிரார்த்திக்கிறேன். அவர் பத்திரமாக நாடு திரும்புவார் என நம்புவோம்’ என கூறியுள்ளார்.
நடிகை ஹூமா குரேஷி, ‘வலிமையுடன் இருங்கள். உங்கள் கண்ணியம் மற்றும் அமைதியை வணங்குகிறேன். இது என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. உங்களையும், குடும்பத்தினரையும் வணங்குகிறேன்’ என்று தெரிவித்து இருந்தார்.
இவர்களை தவிர நடிகர்கள் இம்ரான் ஹாஷ்மி, பர்கான் அக்தர், விக்கி கவுஷல், ரித்திக் ரோஷன், அர்ஜூன் ராம்பால், நடிகைகள் ஹன்சிகா, அம்ரிதா ராவ், நிம்ரத் கவுர் உள்பட பலரும் அபிநந்தனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.