டி.ஜி.பி. நியமனம் தொடர்பான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
டி.ஜி.பி. நியமனம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.
புதுடெல்லி,
டி.ஜி.பி. நியமன விவகாரத்தில் மாநில அரசுகள் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றம் சாட்டி ஓய்வு பெற்ற டி.ஜி.பி.க்கள் பிரகாஷ் சிங், என்.கே.சிங் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2006–ம் ஆண்டு மற்றும் 2018–ம் ஆண்டுகளில் பல உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி மாநில அரசுகள் தங்களை அணுகலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு இதுதொடர்பாக திருத்தம் கோரும் மனுவை தாக்கல் செய்து இருந்தது.
இந்த வழக்கின் விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்றபோது மனுதாரர்களில் ஒருவரான மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் தானே ஆஜராகி வாதாடினார்.
தமிழக அரசு தரப்பில் டி.ஜி.பி.யாக பதவி நியமனம் செய்யப்படுபவர் கட்டாயமாக 2 ஆண்டு பதவி காலம் இருக்க வேண்டும் என்றால், பல மூத்த அதிகாரிகள் பாதிக்கப்படுவர். எனவே ஒருவர் டி.ஜி.பி.யாக பதவியேற்ற பின் 2 ஆண்டு அப்பதவியில் இருக்க வேண்டும் என்று பொதுவாக உத்தரவிட்டால் சரியானதாக இருக்கும் என்று வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.